ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது முதல் ஆட்டத்தில் சமபலத்தில் இருக்கும் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இன்று தனது 2வது போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட ஹாங்காங் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் ஓப்பனர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதல் ஓவரிலேயே நிதான ஆட்டத்தை கையிலெடுத்தனர். ஆயுஷ் சுக்லா வீசிய 2வது ஓவரில் ராகுல் தடுப்பாட்டத்தை மட்டும் விளையாட 1 ரன் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.
இதையடுத்து அதிரடிக்கு திரும்பிய ரோகித், ஹரூன் அர்ஷத் வீசிய 3வது ஓவரில் சிக்ஸர் , பவுண்டரிகளை விளாச, ராகுலும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை நொறுக்கினார். அடுத்து ஆயுஷ் சுக்லா வீசிய பந்தில் பவுண்டரி விரட்டிய ரோகித், அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கோலி, ராகுலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை கையில் எடுக்க அடுத்த 3 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரி கூட இந்த கூட்டணி அடிக்கவில்லை.
பின்னர் 2 ஓவருக்கு ஒரு பவுண்டரி என ஆமைவேக ஆட்டத்தை கடைபிடித்து இருவரும் ரசிகர்களை கடுப்பேற்றினர். 39 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 36 ரன்களை எடுத்திருந்த ராகுல், முகமது கசன்பர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விரட்டி மிரட்டலாக தனது இன்னிங்சை துவக்கினார். அடுத்த ஓவரிலும் சூர்யகுமார் பவுண்டரியை விரட்ட ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது.
ஐசாஸ் கான் வீசிய 16வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸரை விரட்ட, சூர்யகுமார் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்டி அதகளம் செய்தார். ஆயுஷ் சுக்லா வீசிய 18வது ஓவரிலும் சூர்யகுமார் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி மலைக்க வைத்தார். வெகு நேரப் போராட்டத்திற்கு பின், கோலி 40 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் அரைசதம் கடந்தார். அதிரடி மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்து அசத்தினார். 20வது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார் சூர்யகுமார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஹாங்காங் களமிறங்க உள்ளது. சூர்யகுமார் 26 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி 44 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்தார்.
கே.எல்.ராகுல் - விராட் கோலியின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 160-70 ரன்கள் எடுக்கும் என்ற நிலையே இருந்தது. கே.எல்.ராகுல் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 13 ஓவரில் 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய உடன் அடுத்த 7 ஓவர்களிலேயே 98 ரன்கள் குவிக்கப்பட்டது.
193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹாங்காங் அணி 12 ரன்களில் தன்னுடைய முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் இந்த விக்கெட்டை சாய்த்தார். பின்னர் சீரான வேகத்தில் விக்கெட்டுகள் சரிந்தனர். 15 ஓவர்களில் ஹாங்காங் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இன்னும், 30 பந்துகளில் 87 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.