டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்துவரும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வருகிறார். கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் அவரது ஸ்கோர் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.
டி20 கிரிக்கெட் No.1 இடம்.. ஆனால்?
டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, ரோகித் சர்மாவிற்கு அடித்தப்படியாக அதிக டி20 சதங்களை அடித்த இந்திய வீரராக இருக்கிறார். மிகக்குறைவான டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து விளையாடி வரும் சூர்யா, தொடர்ந்து ஐசிசியின் நம்பர் 1 டி20 வீரராக ஜொலித்து வருகிறார். 46 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 13 அரை சதங்களை அடித்திருக்கும் அவர், டி20யில் 46 சராசரியுடன் இருந்துவருகிறார். ஆனால், என்னதான் டி20 போட்டிகளில் ஜொலித்து வந்தாலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளாமல் சொதப்பியே வருகிறார்.
20 இன்னிங்ஸ்களில் 2 அரைசதம் மட்டுமே!
22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சூர்யகுமார் யாதவ் அதில் இரண்டு முறையை தவிர்த்து 20 இன்னிங்களில் பேட்டிங் செய்துள்ளார். இந்த 20 இன்னிங்ஸ்களில் 3 முறை மட்டுமே நாட் அவுட்டாக இருந்துள்ளார். அதன்படி பார்த்தால் மிகக்குறைவான ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறி வருவது நன்றாக தெரிகிறது. டி20 போட்டிகளில் 13 முறை அரைசதம் கடந்துள்ள அவர், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே அரைசதத்தை எட்டியுள்ளார். அவருடைய அதிகபட்ச ரன்னாக 64 ரன்கள் மட்டுமே இருந்துவருகிறது.
தொடர்ச்சியாக 2 முறை முதல் பந்திலேயே 0-ல் வெளியேறிய சூர்யகுமார்!
கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9, 8, 4, 34*, 6, 4, 31, 14, 0, 0 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் 2 போட்டிகளிலும் 0 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். அதுவும் இரண்டு முறையில் முதல் பந்திலே ஆட்டமிழந்தது கோல்டன் டக்கை பதிவு செய்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிக்கு அவர் வேண்டாம்! சஞ்சு அல்லது ருதுராஜை எடுங்கள்!
தொடந்து சூர்யா ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில், அதனை விமர்சித்துவரும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருநாள் போட்டிகளில் சூர்யாவிற்கு இடம் தரவேண்டுமா என்ற கேள்வியை அதிகமாக எழுப்பி வருகின்றனர். ஒரு ரசிகர் கடைசி 12 டி20 போட்டிகளில் 70+ சராசரியோடு இருப்பதாகவும், ஆனால் கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் வெறும் 12 சராசரியோடு தான் இருப்பதாக பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சூர்யா சிறந்த டி20 வீரர் தான் ஆனால், ஒருநாள் போட்டிக்கு அவருக்கான இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
என்ன பிரச்சனை இருக்கிறது? எப்படி சரி செய்ய வேண்டும்!
இந்திய அணியை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையை வென்றாக வேண்டும் என்றால் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மிடில் ஆர்டர் பேட்டரான சூர்யகுமார் சிறப்பாக செயல்படவேண்டிய இடத்தில் இருக்கிறார். 31 வயது வரை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சூர்யா நிச்சயம் அதனை செய்துகாட்ட வேண்டும்.
சூர்யாவிற்கு 3 விதமான பிரச்சனைகள் இருக்கிறது,
* டி20 பார்மேட் ஆட்ட அணுகுமுறையில் இருந்து தன்னை மாற்றி நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். ரஞ்சி கோப்பைகளில் சிறப்பான ரன்களை வைத்திருக்கும் சூர்யா விரைவாக இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்.
* டி20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என எதை எடுத்துக்கொண்டாலும் சூர்யகுமார் 3ஆவது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அந்த இடத்தில் விளையாடுவதால், இந்திய அணி அவருக்கான இடம் என்ன என்பதை உறுதி செய்து அந்த இடத்தில் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்.
* இதுவரை 3 முறை மட்டுமே நாட் அவுட்டாக இருந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். விக்கெட் இழப்பை எளிதாக விட்டுக்கொடுப்பதை தடுத்து நிறுத்தி அதிக நேரம் களத்தில் நின்று விளையாடினாலே அதிக ரன்களை சூர்யாவால் எடுத்துவர முடியும்.
ஸ்ரேயாஸ் இல்லாத நிலையில் மிடில் ஆர்டரில் நிச்சயம் சூர்யா சிறப்பாக செயல்படவேண்டும்!
இந்தியாவின் மிடில் ஆர்டர் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையில், ஒருவேளை அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனால், அந்த இடத்தில் அணியை எடுத்துச்செல்லும் முழுபொறுப்பும் நிச்சயம் சூர்யகுமார் யாதவின் கைகளில் தான் சேரும். சூர்யகுமார் அதனை டி20 போட்டிகளில் நிரூபித்தும் காட்டியுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதை விரைவாக சரிசெய்து, ஓடிஐ-யிலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.