’79/6-லிருந்து 151/6 வரை’.. சீட்டு கட்டு போல் சரிந்த அணியை தனி ஒருவனாக மீட்ட சூர்ய குமார்!

’79/6-லிருந்து 151/6 வரை’.. சீட்டு கட்டு போல் சரிந்த அணியை தனி ஒருவனாக மீட்ட சூர்ய குமார்!
’79/6-லிருந்து 151/6 வரை’.. சீட்டு கட்டு போல் சரிந்த அணியை தனி ஒருவனாக மீட்ட சூர்ய குமார்!
Published on

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணியை, தனி ஒருவனாக நின்று அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அணியின் ஸ்கோரை ரன்களுக்கு உயர்த்தினார்.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மும்பை மற்றும் புனே மைதானத்தில் கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், புனேவில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

துவக்கம் முதலே கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக ஆட, அவருக்கு துணையாக இஷான் கிஷன் நிதானமாக விளையாடினார். பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது மும்பை. ஆனால் ஹர்ஷல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோகித் ஷர்மா.

அவ்வளவு தான்! வலுவான பேட்டிங் லைன் அப் என்று வர்ணிக்கப்பட்ட மும்பையின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் சரியத் துவங்கினர். டெவால்ச் ப்ரெவிஸ், திலக் வர்மா, கீரன் பொலார்ட், ரமந்தீப் சிங் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷனும் 26 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் அவுட்டாகினார்.

50 ரன்கள் வரை விக்கெட்டே இழக்காமல் இருந்த அதே மும்பை அணி 79 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதாவது 29 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள்!! அதன்பின்னர் ஜெய்தேவ் உனத்கட்டுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ். துவக்கத்தில் பொறுமையாக விளையாடிய சூர்யா, ஆடுகளம் ஓரளவு செட்டானதும் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார். 120 ரன்களையாவது மும்பை அணி தொடுமா என எதிர்பார்த்த நிலையில் 150 ரன்களை நோக்கி ஸ்கோரை விரட்டிச் சென்றார் சூர்யா! ஹர்ஷல் ஓவரில் டாட் பால்களால் ஆடிக் கொண்டிருந்த சூர்யா, கடைசி பாலில் சிக்ஸர் விளாசி முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

இன்னிங்ஸ் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் 37 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை குவித்தார். துவண்டு விழுந்த அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தியிருக்கிறார் சூர்ய குமார் யாதவ். 152 ரன்களுக்குள் ஆர்சிபி அணியை சுருட்டி முதல் வெற்றியை ருசிக்குமா மும்பை அணி! அல்லது சென்னைக்கு துணையாக தோல்விப் பயணத்தை தொடருமா? 2வது இன்னிங்ஸ் முடிவில் தெரிய வரும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com