சுரேஷ் ரெய்னாவின் மாமாவை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர் என்றும், ரெய்னாவின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பஞ்சாப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்" என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரெய்னா நாடு திரும்பியதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து jagran செய்தி வெளியிட்டுள்ளது. பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் தந்தையின் சகோதரியான ஆஷா தேவி குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துவிட்டார். அத்தை ஆஷா தேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அத்தை மகன்களான கவுசல் குமார்(32), அபின் குமார்(24) ஆகியோரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த அசோக் குமாரின் 80 வயது தாயாரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார். குற்றவாளிகள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை.