என் மாமா உள்ளிட்ட இரண்டு பேர் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் தந்தையின் சகோதரியான ஆஷா தேவி குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துவிட்டார். அத்தை ஆஷா தேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்தை மகன்களான கவுசல் குமார்(32), அபின் குமார்(24) ஆகியோரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த அசோக் குமாரின் 80 வயது தாயாரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார். குற்றவாளிகள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க துபாய் சென்றிருந்த ரெய்னா உடனடியாக நாடு திரும்பினார்.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்துள்ளார் அதில் "என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா கொலை செய்யப்பட்டார், என் இரண்டு மாமா மகன்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். என்னுடைய அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்"
"இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என தெரியவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டால் பலபேருக்கு இதுபோன்ற கொடூரங்கள் நிகழக் கூடும்" என ரெய்னா பதிவிட்டுள்ளார்.