சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ’சின்னத்தல’யும் இந்திய கிரிக்கெட் வீரருமான சுரேஷ் ரெய்னா, இலங்கையில் பாடிய இந்தி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி, தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. அடுத்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி, இலங்கை நிர்ணயித்த 215 ரன்களை சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது. மூன்று அணிகளும் தலா ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்று சமநிலை வகிப்பதால் இந்த தொடர் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்திய அணி, இலங்கை அணியை இன்று மீண்டும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இன்று காலை இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலின் ரெஸ்டாரென்டில் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது வந்த இந்திய வீரர்கள் அங்கு கூடினர். ரெய்னா, அங்கிருந்த இசைக் கலைஞர்களிடம் இந்தி பாடலை பாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் சரி என்றனர். அவர்களும் சில இந்தி பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து சுரேஷ் ரெய்னா, பழம் பெரும் பாடகர் கிஷோர் குமாரின் சூப்பர் ஹிட் இந்தி பாடலான, ‘யே ஷாம் மஸ்தானி... மதோஷ் கியேஜயே’(Ye shaam mastani..madhosh kiye jaye) என்ற பாடலை பாடினார். இதை இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஓட்டலில் இருந்தவர்களும் ரசித்தனர். இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனது.
சுரேஷ் ரெய்னா சிறப்பாகப் பாடக்கூடியவர். ஏற்கனவே இந்தி படம் ஒன்றுக்காக அவர் பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.