2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா நீடிப்பது குறித்து எம்.எஸ்.தோனி முடிவு செய்வார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றி புதிய வீரர்களை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் ஐபிஎல் வரலாற்றில் கடந்தாண்டு மோசமாக விளையாடிய சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதில் முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசல்வுட், கரண் சர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் "சின்ன தல" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் கடந்தாண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் ஆகியோரை நீக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் இருவர் குறித்த முடிவை தோனிதான் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு துபாய் சென்ற சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றார். ஆனால் சொந்தக் காரணங்களுக்காக அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். சொந்தக்காரணங்கள் என சொல்லப்பட்டாலும் சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உலா வந்தன. சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைய விருப்பம் இருப்பதாக கூறினாலும் அதன்பின்பு சிஎஸ்கே நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலும் ரெய்னாவின் பார்ம் அவ்வளவு சிறப்பானதாகவும் இல்லை.
அதேவேளையில் கேதர் ஜாதவ் கடந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 62 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே கேதர் ஜாதவ் நிச்சயம் வெளியேற்றப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்துக்கு முன்பு தோனியிடம் ரெய்னா மற்றும் கேதர் ஜாதவ் குறித்த அபிப்ராயம் கேட்கப்படும். அதன்படி இறுதி முடிவு எடுக்கப்படும் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.