ஐபிஎல் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கின் அதிரடி விளாசலால் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெற்றிபெற்றது.
பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்றுத் தொடங்கியது. நடப்பு சாம்பியனான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 14 ரன்களில் வெளியேறினார். ஷிகர் தவான் 40 ரன்களும் ஹென்ரிகஸ் 52 ரன்களும் விளாசினார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசிய யுவராஜ் சிங், 27 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
நின்று ஆடி ரசிகர்களை குஷிப் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல், 32 ரன்களில் நடையை கட்ட, ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மந்தீப் சிங் 24, ஹெட் 30, வாட்சன் 22 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். மற்றவர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 172 ரன்களில் ஆட்டத்தை முடித்து தோல்வியை தழுவியது பெங்களூர். 62 ரன் குவித்த யுவராஜ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இன்று நடக்கும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும் மோதுகின்றன.