தோல்வியே காணாமல் வெற்றிகளை குவித்து வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வ வைத்து அதிர்ச்சி அளித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஐபிஎல் 2022 தொடரின் 21 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வந்தது. துவக்கத்தில் 2 போட்டிகளில் தோல்வியுற்ற சன் ரைசர்ஸ் சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பி இருந்தது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் அணியின் தரப்பில் மேத்யூ வேட், சுப்மன் கில் ஓப்பனர்களாக களமிறங்கினர். வழக்கமான அதிரடியைக் காட்ட முயன்ற சுப்மன் கில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த சாய் சுதர்சனும் நிலைத்து ஆடாமல் நடராஜன் பந்துவீச்சில் வீழ்ந்து சொதப்பினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்புணர்ந்து நிதானமான விளையாடத் துவங்கினார். ஏதுவான பந்துகளை மட்டும் அவர் எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருக்க, மறுமுனையில் மேத்யூ வேட், உம்ரான் பந்துவீச்சில் டல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஹர்திக்கிற்கு சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்க வந்தார் அபினவ் மனோகர். பவுண்டரி, சிக்ஸர்களாக இருவரும் மாறி மாறி விளாச, ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் இந்த வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் புவனேஷ்வர் குமார். 35 ரன்கள் குவித்த நிலையில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த அபினவை வெளியேற்றினார். அடுத்து வந்த ராகுல் தெவாட்டியா ரன் அவுட்டாக, ரஷித் கான் நடராஜன் பந்துவீசில் க்ளீன் போல்டானார். 20 ஓவர்கள முடிவில் குஜராத் அணி 162 ரன்களை குவித்தது. கேப்டன் ஹர்திக் ஆட்டமிழக்காமல் அரைசதம் கண்டிருந்தார்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, சன் ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்கள் அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியன்சன் களமிறங்கினர். சென்னைக்கு எதிராக கையாண்ட அதே உத்தியை இந்தப் போட்டியிலும் பின்பற்றியது சன்ரைசர்ஸ். நிதான தொடக்கம். 10 ஓவர்களை கடந்ததும் அதிரடி ஆட்டம்! இதுதான் சன் ரைசர்ஸ் பின்பற்றும் புது பார்முலா! இருவரும் ஓப்பனர்களாக ஒத்திசைந்து விளையாடத் துவங்கினர். பவுண்டரிகளை ஒருபக்கம் அபிஷேக் விளாச, சிக்ஸர் மழையை மறுபக்க வில்லியம்சன் பொழிய, இந்த ஜோடியை பிரிக்க இயலாமல் குஜராத் அணி திணறிப்போனது.
ஒருவழியாக ரஷித் கான் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா 42 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறியதால் சன்ரைசர்ஸ் அணி தடுமாறுவதுபோல தோன்றியது. ஆனால் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் வில்லியன்சனுடன் ஜோடி சேர்ந்து குஜராத் வீரர்கள் மனதில் எழுந்த நம்பிக்கையை சுக்கு நூறாக்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டிருந்தபோது, அரைசதம் கண்ட நிலையில் வில்லியன்சன் ஹர்திக் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரத்துடன் சேர்ந்து நிக்கோலஸ் பூரான் சன் ரைசர்ஸை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
5 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். முதல் இரு ஆட்டங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அந்த அணி, அடுத்த இரு ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளது. பொறுப்புடன் விளையாடி சன் ரைசர்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற கேப்டன் கேன் வில்லியன்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.