ராஜஸ்தானை அடித்து நொறுக்கிய ஹைதராபாத் : மாஸ் காட்டிய மணிஷ் பாண்டே..!

ராஜஸ்தானை அடித்து நொறுக்கிய ஹைதராபாத் : மாஸ் காட்டிய மணிஷ் பாண்டே..!
ராஜஸ்தானை அடித்து நொறுக்கிய ஹைதராபாத் : மாஸ் காட்டிய மணிஷ் பாண்டே..!
Published on

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களான உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உத்தப்பா 19 (13) ரன்களில் ரன் அவுட் ஆக, அதன்பின்னர் வந்த சஞ்சு சாம்சனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயத்தினார் ஸ்டோக்ஸ். 26 பந்துகளை சந்தித்த சாம்சன் 36 ரன்களை அடித்துவிட்டு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 30 (32) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அதிரடியான ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தப் போகிறார்கள் என நினைத்தபோது 9 (12) ரன்களில் பட்லர் விக்கெட்டை பறிகொடுத்தார். 15 பந்துகளை சந்தித்த ஸ்மித் கடைசி வரை அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் 19 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு நடையைக்கட்டினார். 12 பந்துகளில் 20 ரன்களை எடுத்துவிட்டு ரியான் பராக் பெவிலியன் திரும்ப, கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 7 பந்துகளில் 16 ரன்களை விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை சேர்த்தது.

ராஜஸ்தான் பேட்டிங்கில் எந்த பேட்ஸ்மேனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாது அதிக ரன்களை குவிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. 30 ரன்களை அடிக்க 32 பந்துகளை ஸ்டோக்ஸ் எடுத்துக்கொண்டது மந்தமாக தெரிந்தது. மிடில் ஆர்டரிலும் ஜாஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியை வெளிப்படுத்தாதது பின்னடைவாக அமைந்தது.

ஹைதராபாத் பந்துவீச்சில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஜாசன் ஹோல்டர் அசத்தினார். 4 ஓவர்களுக்கு 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ரஷீத் கான் ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். 4 ஓவர்களுக்கு 46 ரன்களை வாரிக்கொடுத்ததுடன் விக்கெட் எதையும் கைப்பற்றாமல் நடராஜன் கோட்டை விட்டிருந்தார். 3 ஓவர்கள் வீசிய விஜய் சங்கர் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்கத்திலேயே வார்னர் 4 (4) ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பேரிஸ்டோ 10 (7) ரன்களில் வெளியேறியது அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர் போட்டியின் போக்கை மாற்றினர். இருவரும் விக்கெட்டை இழக்காமல் ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். அரை சதம் கடந்த மணிஷ் பாண்டே அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

30 ரன்கள் வரை பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய விஜய் ஷங்கர் அதன்பின்னர் அதிரடி மன்னனாக மாறினார். ஆர்ச்சர் வீசிய 16 ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அவர் விளாசினார். இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியைப் பறித்தனர். 47 பந்துகளை சந்தித்த மணிஷ் பாண்டே 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் என மொத்தம் 83 ரன்களை விளாசினார். மறுபுறம் அரை சதம் அடித்து விஜய் சங்கர் சூப்பரான இன்னிங்ஸை கொடுத்திருந்தார். இதனால் 18.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் பவுலிங்கில் தொடக்கத்திலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ஆர்ச்சர் மிரட்டியிருந்தார். ஆனால் அதன்பின்னர் எந்த பவுலர்களும் விக்கெட்டை கைப்பற்றாமல் விட்டது தோல்விக்கு வழி வகுத்தது. 3 ஓவர்களுக்கு கார்திக் தியாகி 40 ரன்களுக்கு மேல் வாரிக்கொடுத்தது சொதப்பலாக அமைந்தது. ஹைதராபாத் பேட்டிங்கில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாலும், அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மணிஷ் பாண்டேவும், விஜய் ஷங்கரும் அமர்க்களப்படுத்தினர். அவர்கள் இருவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணியை அடித்து நொறுக்கி அசத்தலான வெற்றியை ஹைதராபாத் பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com