ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூரு நகரில் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச் தனது பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான அவர் ஐபிஎல் களத்தில் வீரராகவும், பயிற்சியாளராகவும் பல்வேறு அணிகளுடன் பயணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது திடீர் விலகலுக்கு காரணமாக அண்மையில் நிறைவடைந்த ஏலம் என்று தெரிகிறது. மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பின்பற்றிய ஸ்ட்ரேட்டஜியில் தனக்கு உடன்பாடு இல்லை என அவர் சொல்லியுள்ளதாக தகவல். மேலும் ஏலத்திற்கு முன்பாக வகுக்கப்பட்ட திட்டங்களை அணி உரிமியாளர் தரப்பு ஏலத்தின் போது நிராகரித்தது அவருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கேடிச் மெகா ஏலத்தில் கலந்து கொண்டிருந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கடந்த சீசனில் டேவிட் வார்னர் புறக்கணிக்கப்பட்டது அதிர்வலைகளை எழுப்பியிருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், நிக்கோலஸ் பூரன், நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜெகதீஷா சுச்சித், மார்க்ரம், மார்கோ ஜான்சன், ரோமன் ஷெபெர்ட் , சமர்த், ஷஷாங்க் சிங், சவுரப் தூபே, விஷ்ணு வினோத், கிளென் பிலிப்ஸ், ஃபரூக்கி ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.