ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணியில் சாஹா மற்றும் குப்தில் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் 4 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தனர். சாஹா 11 பந்துகளில் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே வெறும் 9 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக ஆடினார்.
இவரின் ஆபார ஆட்டத்தால் ஐதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் குவித்தது. வில்லியம்சன் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 70 ரன் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குப்தில் 30 ரன்னும் விஜய் சங்கர் 27 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டையும் சைனி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், 176 ரன்னை இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி, 19.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்த்திவ் படேல், முதல் ஓவரிலும் கேப்டன் விராத் கோலி 16 ரன்னிலும் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் ஒரு ரன்னிலும் ஏமாற்றினர். இதனால் முதல் 3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி தடுமாறியது.
ஆனால், அடுத்த வந்த ஹெட்மயர், குர்கீரத் சிங் ஆகிய இருவரும் அடித்து ஆடினர். ஹெட்மயர் 32 பந்துகளில் தனது அரைசம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 47 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் அதிரடி காட்டிய, குர்கீரத் சிங் 48 பந்தில் 65 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் 9 ரன்களும், கிராண்ட்ஹோம் 3 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஐதராபாத் சார்பில் கலில் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்ட பெங்களூரு அணிக்கு இது ஆறுதல் வெற்றி. 8 வது தோல்வியை சந்தித்துள்ள ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியிருக்கிறது. மும்பைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணி தோற்றால், ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்றில் ஆட வாய்ப்பு கிடைக்கும்.