சுரேஷ் ரெய்னா ஒரு கடவுளைப்போல தன் வாழ்க்கையில் நுழைந்ததாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் தியாகி. வேகப்பந்து வீச்சாளராக அசத்திய அவரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. தனது முதல் சீசனில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்தார். இந்த ஆண்டு மெகா ஏலத்தில், அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ரூ. 4 கோடிக்கு எடுத்தது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஒரு கடவுளைப் போல சுரேஷ் ரெய்னா தன் வாழ்க்கையில் நுழைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய அவர், “16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், நான் 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை ஒரு சீசனில் வீழ்த்தி இருந்தேன். அங்குதான் மாநில அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் ஒரு வீரர் இருப்பதை தேர்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். அங்கிருந்து நான் மாநில ரஞ்சிக் கோப்பை முகாமுக்கு வந்தேன். நான் வந்தபோது, நான் 16 வயது இளைஞனாக இருந்தேன், மற்றவர்கள் வயதில் மூத்த வீரர்கள். அப்போது சுரேஷ் ரெய்னாவும் அங்கு வந்தார். நான் மிகவும் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
பின்னர் அவர் என்னை அணுகி என் பங்கு என்ன என்று கேட்டார். நான் ஒரு பந்து வீச்சாளர் என்று சொன்னேன். பின்னர் அவர் எனக்கு வலைகளில் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார். அவர் எனது ஆட்டத்தை பார்த்து, எனது பந்துவீச்சு அவருக்கு பிடித்திருப்பதாகவும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் கூறினார். தனிப்பட்ட முறையில், சுரேஷ் ரெய்னா போன்ற ஒருவர் எனது ஆட்டத்தை கவனித்தது நம்பிக்கையை அளித்தது. இவ்வளவு பெரிய வீரர் என்னைப் பாராட்டியதைக் கண்டு சற்று அதிர்ச்சியடைந்த நான், ஒரு கணம், அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தேன்.
நான் நன்றாக பந்துவீசுவதாக அவர் சொன்னபோது கடவுள் வந்து நம்பிக்கையை அளிப்பதுபோல இருந்தது. அதன் பிறகு, உ.பி.யின் ரஞ்சி அணியில் எனது பெயர் தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எனது ரஞ்சி வாழ்க்கை அங்கிருந்து தொடங்கியது. பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடினேன். இப்போது ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட திட்டமிட்டுள்ளேன்” என்று கூறினார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக இதுவரை விளையாடவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தன்னால் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்க்க முடியும் என்று நம்புகிறார். சன் ரைசர்ஸ் அணி தற்போது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ஆறு ஆட்டங்களில் விளையாடி 4-இல் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.