இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் விளாசினார். அகர்வால் 108, ஜடேஜா 91, ரகானே 59, புஜாரா 58 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நேற்று ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான இன்று பிருயன் (30) நோர்ஜே (3) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்க அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அதனால், எளிதில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டையும் இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டு பிளிசிஸ் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அவருக்கு ஜோடியாக டி காக் 31 ரன்கள் எடுத்து சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்தார். அவரை தொடர்ந்து டு பிளிசிஸும் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். முத்துசாமி 7 ரன்னில் நடையைக் கட்ட தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது.
இதனையடுத்து, பிலாண்டர் - மகாராஜ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இவர்களின் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை. மகாராஜ் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். 200 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 250 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி தாண்டியது.
இறுதியில் 72 ரன்கள் எடுத்த போது அஸ்வின் பந்துவீச்சில் மகாராஜ் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரபாடா 2 ரன்னில் உடனே அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட் சாய்த்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தார்.
இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா 326 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.