இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டதும் கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் வீரர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக, ``வலுவான இந்திய அணிக்கு எதிராக சொத்தையான இங்கிலாந்து அணியை தேர்வு செய்துள்ளனர்" என்று குரல் எழுப்பியுள்ளனர்.
இதற்கு காரணம் முதலிரண்டு போட்டிகளில் பேர்ஸ்டோ, பட்லர் போன்ற முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு வழங்கியதுதான். கொரோனா சூழல், தொடர் போட்டிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், மூன்று ஃபார்மட்டிலும் விளையாடும் பட்லர், பேர்ஸ்டோ உள்ளிட்ட வீரர்களை ரொட்டேஷன் பாலிசியின் முறையில் பயன்படுத்த முடிவு செய்து, அதன் விளைவாகத்தான் அவர்களுக்கு ஓய்வு அளித்துள்ளனர்.
இலங்கையில் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஜானி பேர்ஸ்டோ முதலிரெண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சமகால இங்கிலாந்து வீரர்களில் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடும் திறன் கொண்டவர் பேர்ஸ்டோ. அப்படிப்பட்டவரை அஸ்வின் போன்ற உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராக விளையாடாமல் ரெஸ்ட் கொடுத்திருப்பது இங்கிலாந்து வீரர்களுக்கே ஓர் ஆச்சர்யமான முடிவு.
அதேபோல் ஜோஸ் பட்லர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவர் முதல் டெஸ்ட்டில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் அவர் நாடு திரும்ப இருக்கிறார். சமீபத்திய தொடர்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் பட்லர் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல், வேகப் பந்துவீச்சாளர் மார்க்வுட், இடது கை ஆல் ரவுண்டர் சாம் கரன் ஆகியோரும் முதலிரெண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இருவரும் டெஸ்ட் போட்டியில் ஒன்றாக பங்கேற்கமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியில் இருவரையும் இங்கிலாந்து அணி களமறிக்கவில்லை. இதனால் இருவரின் யாராவது ஒருவர் மட்டுமே இந்தியாவுக்கு எதிரான பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பர் என தெரிகிறது. எனினும், இலங்கை தொடருக்கு செல்லாத, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக், வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்திய தொடருக்கு வந்துள்ளனர். இது அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம்.
அதென்ன ரொட்டேஷன் பாலிசி?
சுழற்சி அடிப்படையில் வீரர்களை பயன்படுத்துவதுதான் ரொட்டேஷன் பாலிசி. 2021-ல் இலங்கை சுற்றுப் பயணத்துடன் சேர்த்து இங்கிலாந்து அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளைத் தவிர இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை, அடுத்த ஐபிஎல் தொடர் என தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள். அதிலும், ஐ.பி.எல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் பிரதான வீரர்களாக இருக்கிறார்கள்.
வரவிருக்கும் இந்தப் போட்டிகள் அனைத்தும் பயோ பபிள் எனப்படும் கொரோனா பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் நடைபெற இருக்கிறது. இதனால் எந்தவொரு வீரரும் இதுபோன்ற சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு இருப்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சாத்தியமில்லை என்று கருதி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இதுதொடர்பாக கூறும்போது, ``நாங்கள் ஓய்வு கொடுக்கவும் ரொட்டேஷன் பாலிசியை பின்பற்றவும் முடிவு செய்துள்ளோம். நாங்கள் வீரர்களைக் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். சிக்கல்கள் வரும் வரை காத்திருப்பதை விட, நாங்கள் அவர்களைக் கவனிப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். வீரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையிலும், இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" எனக் கூறியிருக்கிறார்.
முன்னாள் வீரர்கள் சொல்வதென்ன?
வீரர்களின் செயல்திறனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறினாலும், முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் ஆகியோர் இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அதிலும் 2012 இந்திய டூரின்போது டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்த கெவின் பீட்டர்சன், ``இங்கிலாந்து வாரியம் ஒரு சிறந்த அணியை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தெரிவு செய்துள்ளதா என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பெறுகிற வெற்றி என்பது ஆஸ்திரேலிய மண்ணில் பெறுகிற வெற்றிக்கு நிகரானது.
இந்த மோசமான அணி தேர்வின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ விளையாடி இருக்க வேண்டும். பிராட் அல்லது ஆண்டர்சன் விளையாடி இருக்க வேண்டும். சிறந்த வீரர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த விவாதத்தில் ஐபிஎல் ஏன் இழுக்கப்படுகிறது?
பணம் கொழிக்கும் விளையாட்டான ஐபிஎல் போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை மாற்றி அமைக்கும் சக்தி இருக்கிறது. இதற்கு உதாரணம்தான், கொரோனா பெருந்தொற்று இருந்த காலத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டிகள். வருகிற ஏப்ரல் மாதம் இந்தியாவிலும் ஐ.பி.எல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர், சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என பல இங்கிலாந்து வீரர்க ஐ.பி.எல் அணிகளில் முக்கியமான வீரர்கள். இவர்கள் அனைவரும் ஐபிஎல் மூலம் சம்பாதித்து வருவது பல கோடிகள். இதனால்தான் தற்போது ஏப்ரலில் நடைபெற இருக்கும் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரைக் கூட தள்ளி வைக்க இங்கிலாந்து யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வெறும் பணம் சம்பாரிக்கும் கண்ணோட்டம் மட்டுமில்லால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு வீரர்கள் தயாராகும் விதமாகவும் இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கணக்கு போடுகிறது.
டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளுக்கு பட்லர் ஏன் விருப்பப்படுகிறார்?
ஷார்ட் பார்மெட்களில் உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் பட்லர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு டி20 தொடரில் பட்லர் இடம்பெறுவது அணிக்கு கூடுதல் பலத்தச் சேர்க்கும். இதனால் இந்தியாவில் முழு பலம் கொண்ட டி20 அணியை உருவாக்க வேண்டும் என்று கேப்டன் இயான் மோர்கல் விரும்புவதன் விளைவே பட்லர் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த இருப்பது!
- மலையரசு