150 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககரா, சச்சின் டெண்டுல்கர் இருவரையும் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் முறையே 78 மற்றும் 72 ரன்களை விளாசினார். தற்போது லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் விளாசினார் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் சதமடிக்காமல் 59 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்ஸ்கள் விளையாடி 7,993 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் 150 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதிக ரன்கள் குவித்து முன்னிலையில் இருந்த குமார் சங்கக்கரா (7,913 ரன்கள்), சச்சின் டெண்டுல்கர் (7,869 ரன்கள்) ஆகியோரை முந்தினார் ஸ்மித். இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் வீரேந்திர சேவாக் (7,694 ரன்கள்), ராகுல் டிராவிட் (7,680 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். சதமடிக்க தவறிய நிலையிலும், ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.