நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் ஒளிபரப்பில் விளம்பரம் மூலம் ரூ.2400 கோடி வருவாய் ஈட்டினாலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சின்ன வருத்தம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.
கடும் நெருக்கடிகளைத் தாண்டி, ஐபிஎல் 2020 சீசனை நடத்தி முடித்திருக்கிறது பிசிசிஐ. இந்தத் தொடரால் வருமானம் இழப்பு என்றும், இதனால் அடுத்த சீசனில் புதிதாக அணிகளை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, பிசிசிஐ-க்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் அதேவேளையில், போட்டிகளை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு பெரும் தொகை கொடுத்து எடுத்தது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். தமிழ், தெலுங்கு என மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் போட்டிகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் மூலம், ரூ.2400 கோடி வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. கொரோனா காரணமாக 6 மாதமாக செயல்படாமல் இருந்து பல நிறுவனங்கள் வருவாய் இழப்பால், இந்த சீசனில் விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அதையெல்லாம் மீறி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது.
அதேநேரத்தில், பார்வையாளர்களும் முன்பைவிட இந்த சீசனில் அதிகரித்தனர். இதனால், தொலைக்காட்சி விளம்பரம் மூலம் ரூ.2,250 கோடியும், ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரையிலுமான வருவாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த வருமானம் அதிகம் என்றாலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சின்ன வருத்தத்தில் இருப்பதாக கூறுகிறார்கள், பொருளாதார வல்லுநர்கள். அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
"கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட சூழல்கள் காரணமாக ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்தவர்கள் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. குறிப்பாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பார்வையாளர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்த அதேவேளையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில்தான் அதிகரித்துள்ளது.
அதன் முக்கிய காரணம், 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது. ஒருவேளை, இப்படி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தெரிந்திருந்தால், தொடர் நடக்கும்போது விளம்பரங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த கோணத்தில் பார்த்தால் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு கொஞ்சம் வருத்தம் தரும்" எனக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இந்த ஐபிஎல் சீசனில், போட்டி தொடங்குவதற்கு முன்பு 18 ஸ்பான்சர்களுடனும், 117 விளம்பரதாரர்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம் செய்தது. அதுவே, ஐபிஎல் 2019 சீசன் உடன் கணக்கிடுகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா 13 ஆன் ஏர் விளம்பரதாரர்களுடன் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.