நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக அடியெடுத்து வைத்த இலங்கை அணி!

நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக அடியெடுத்து வைத்த இலங்கை அணி!
நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக அடியெடுத்து வைத்த இலங்கை அணி!
Published on

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியபோதும், தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி தனது இன்னிங்சை துவக்கியது. ஓப்பனர் விக்ரம்ஜித் சிங் தீக்சனாவிடம் சிக்கி வெளியேற, அடுத்து களமிறங்கிய பாஸ் டி லீட், காலின், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் வந்த வேகத்தில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற நெதர்லாந்து அணி தடுமாற துவங்கியது.

துவக்கத்தில் இருந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஒடோட் மட்டும் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்து தோல்வியை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உறுதுணையாக நின்று விளையாட சரியான வீரர்கள் கூட்டணி அமைக்காத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது நெதர்லாந்து அணி. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இலங்கை அணி, குருப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 12 சுற்றிற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com