வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் சொதப்பி வந்த இலங்கை, இந்தப் போட்டியில் பேட்டிங்கில் அசத்தினர். தொடக்க வீரர்கள் உட்பட அனைவருமே சிறப்பாக விளையாடினர்.
அவிஷ்கா பெர்னான்டோ 103 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். பெராரா 51 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 339 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் அம்ரிஸ் 5, விக்கெட் கீப்பர் சாய் ஹோப் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 22 ரன்னில் அந்த அணி இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
சற்று நேரம் தாக்குப்பிடித்த கிறிஸ் கெயில் 35(48) ரன்னில் நடையைக் கட்டினார். ஹெட்மயர் 29, ஹோல்டர் 26 ரன்னில் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது. அதனால், எளிதில் அந்த அணி ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் நிக்கோலஸ் பூரான் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு ஆலென் ஒத்துழைப்பு அளித்தார். இருவரது சிறப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்தது.
எதிர்பாராத விதமாக ஆலென் ரன் அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் விளாசி இருந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் அந்த அணிக்கு 35 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடி காட்டிய பூரான் சதம் அடித்தார். கடைசி நேரத்தில் மூன்று ஓவர்களில் 31 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், நிக்கோலஸ் பூரான் 103 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களால் அந்த ரன்னை அடிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மலிங்கா 3 விக்கெட் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய 6 ஆவது தோல்வியை பதிவு செய்தது. இலங்கை அணிக்கு இது மூன்றாவது வெற்றி ஆகும். இருவரும் ஏற்கனவே அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்டனர்.