குரூப் சுற்று அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைகிறது இலங்கை அணி. தொடரிலிருந்து தான் வெளியேறுவது மட்டுமில்லாமல் நமீபியாவையும் சேர்த்து வெளியேற்றி உள்ளது ஐக்கிய அமீரகம் அணி.
நமீபியா - ஐக்கிய அமீரகம் போட்டி ஏன் சுவாரஸ்யமானது?
நமீபியா முதல் போட்டியில் இலங்கை அணியை வென்ற பிறகு நமீபியாவுக்கும் இலங்கைக்கும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் பலத்த போட்டி இருந்தது. ஆனால் பிறகு இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த 2 போட்டிகளில் வென்று நல்ல ரன் ரேட்டுடன் அட்டவணையின் இரண்டாம் இடத்தில் இருந்தது. இன்றைய போட்டியில் நமீபியா அயர்லாந்து நமீபியாவை வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருக்கும் பிரிவுக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் பல சுவாரசியமிக்க போட்டியாக நடந்த நமீபியா ஐக்கிய அமீரகம் அணிகள் மோதிய இன்றைய போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது.
148 ரன்கள் எடுத்த ஐக்கிய அமீரகம்:
டாஸ் வென்ற ஐக்கிய அமீரக அணியின் கேப்டன் ரிஸ்வான் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஐக்கிய அமீரக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். 39 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த அமீரக அணி, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஸ்வான் மற்றும் வாசீம் இருவரின் கூட்டணியால் நல்ல இலக்கை நிர்ணயிப்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்தது. 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் வாசீம் அரைசதம் அடித்து 50 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஷரஃபு 4 ரன்களில் வெளியேற பின்னர் இறங்கிய பசீல் ஹமீதுடன் கைக்கோர்த்த கேப்டன் ரிஸ்வான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு அணியை 148 ரன்களுக்கு எடுத்து சென்றனர். 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசிய கேப்டன் ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என அதிரடி காட்டிய பசீல் ஹமீத் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நமீபியாவுக்கு ஷாக் கொடுத்த ஐக்கிய அமீரக பவுலர்கள்:
149 ரன்களை அடித்து எளிதாக வென்று சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுவிடலாம் என்று களமிறங்கிய நமீபியா அணிக்கு ஷாக் கொடுத்தார்கள் அமீரக அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். 10 ரன்களுக்கு முதல் விக்கெட், 16 ரன்களுக்கு 2ஆவதுவிக்கெட், 26, 43, 46, 67 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நமீபியா அணி. விரைவாக நமீபியா தோல்வியடைந்துவிடும் என்ற நிலையில், 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் வைஸ் அமீரக அணிக்கு பயத்தை காமித்தார்.
கடைசி நேரத்தில் த்ரில் ஆக மாறிய போட்டி:
ரூபென் உடன் கைக்கோர்த்த டேவிட் வைஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களுக்கு 36 ரன்கள் தேவை என்ற இடத்தில் 18ஆவது ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாசி 16 ரன்களை பெற்றது நமீபியா அணி. 2 ஓவர்களுக்கு 20 ரன்கள் தேவையாக இருந்த போது ஷகூர் கான் சிறப்பாக பந்து வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து அமீரக அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
பின்னர் கடைசி ஓவரில் 14 ரன்கள் பெற்றால் வெற்றி இடத்தில் முதல் 3 பந்துகளுக்கு 4 ரன்களை சேர்த்தது நமீபியா. 3 பந்துகளில் 10 ரன்கள் என்ற இடத்தில் டேவிட் வைஸ் சிக்சர், பவுண்டரி என அடித்து முடித்து வைப்பார் என நினைத்த போது பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வெற்றி பெற்றது ஐக்கிய அமீரக அணி.
அதிக ரன் ரேட்டில் இருந்த நமீபியா இந்த போட்டியில் வென்றிருந்தால் இந்தியா இருக்கும் குரூப் 2 பிரிவுக்கு இலங்கை அணி செல்லும் என்ற நிலை இருந்தது. நமீபியா தோல்வி அடைந்ததால் இலங்கை அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து இருக்கும் குரூப் 1 பிரிவுக்கு செல்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் நெதர்லாந்து இந்தியா பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இருக்கும் குரூப் 2 பிரிவுக்கு செல்கிறது. ஐக்கிய அமீரக அணி தான் செல்வதும் இல்லாமல், நமீபியாவையும் கையோடு தொடரிலிருந்து வெளியேற்றி உள்ளது.