SRH VS RR : ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி : டாப் 10 தருணங்கள் 

SRH VS RR : ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி : டாப் 10 தருணங்கள் 
SRH VS RR : ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி : டாப் 10 தருணங்கள் 
Published on

துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் சீஸனின் 26வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றிப்பெற்றது.

இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்கள்…

1.அணியில் நான்கு மாற்றங்களை மேற்கொண்ட ராஜஸ்தான்

கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வீழ்ச்சியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அதிலிருந்து மீண்டு வரும் நோக்கில் வெற்றிக்கான பார்முலாவை வகுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் நான்கு மாற்றங்களை மேற்கொண்டது. 

ஜெய்ஸ்வால், மஹிபால், ஆரோன் மற்றும் டையை அணியிலிருந்து வெளியேற்றி அவர்களுக்கு மாற்றாக ஸ்டோக்ஸ், ரியான் பராக், உனட்கட் மற்றும் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டனர்.

“ஸ்டோக்ஸின் வருகை அணியில் வலு சேர்க்கும்” என டாஸின் போது சொல்லியிருந்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.  

2.சொதப்பிய பேர்ஸ்டோ - வார்னர் இணையர்

ஹைதராபாத் அணியின் பலமே அதன் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தான். வார்னரும், பேர்ஸ்டோவும் சர்வதேச கிரிக்கெட்டில் மோஸ்ட் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள். ஐபிஎல் ஆட்டங்களிலும் இருவரும் ஜோடி போட்டு எதிராணியினரின் ஜோலியை முடித்துள்ளனர். 

ஆனால் இந்த ஆட்டத்தில் 28 பந்துகளுக்கு வெறும் 23 ரன்களை மட்டுமே குவித்தனர். 

3.நங்கூரம் போட்ட மணீஷ் பாண்டே

பவர் பிளேயில் 26 ரன்களை எடுத்திருந்த ஹைதராபாத் அணிக்காக களத்தில் தனது பேட்டால் நங்கூரம் போட்டு ANCHORING இன்னிங்க்ஸை டெலிவரி செய்தார் மணீஷ் பாண்டே. 44 பந்துகளில் 54 ரன்களை குவித்தார் அவர்.

4.கேப்டன்சி நாக் கொடுத்த வார்னர்

‘கிரீஸ்ல நான் இருக்கேன்’ என எதிரணியினருக்கு அதிரடியான பவுண்டரிகள் மூலம் தனது வார்னிங்கை கொடுப்பது ஹைதராபாத் கேப்டன் வார்னரின் பாணி. ஆனால் இந்த ஆட்டத்தில் கேப்டன் என்ற பொறுப்போடு விளையாடி 48 ரன்களை குவித்த்திருந்தார்.

5.கடைசி 14 பந்துகளில் 36 ரன்கள்

17.4 ஓவர் முடிவில் 122 ரன்களை குவித்திருந்த ஹைதராபாத் அணிக்காக 14 பந்துகளில் 36 ரன்களை எடுக்க உதவினர் பேட்ஸ்மேன்கள் வில்லியம்சன் மற்றும் பிரியம் கார்க். அந்த 14 பந்துகளில் 6 பந்துகளை ஆர்ச்சரும், 8 பந்துகளை உனட்கட்டும் வீசியிருந்தனர்.

6.ஏமாற்றிய ஸ்டோக்ஸ் - பட்லர்

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் பெரிய பலமாக பார்க்கப்டுகின்றனர் பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர். இருவரும் பட்டாசை வெடித்து ஹைதராபாத்தின் பந்து வீச்சை சிதறவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. 

ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும், பட்லர் 16 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

7.ஸ்மித் ரன் அவுட் 

நடராஜன் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு ரன்களை எடுக்க ஓட்டம் எடுத்த போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்மித் விஜய் ஷங்கரின் துல்லியமான த்ரோவினால் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார்.

8.மெய்டன் ஓவர் வீசிய நடராஜன்

ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பவர் பிளேயின் கடைசி ஓவரை மெய்டனாக வீசி அசத்தியிருப்பார்.

சஞ்சு சாம்சனுக்கு எதிராக குட் லெந்தில் மூன்று பந்துகளும், ஷார்ட் லெந்தில் இரண்டு பந்துகளும், ஃபுள் லெந்தில் ஒருபந்தும் அவர் வீசினார்.

9.கேம் கண்ட்ரோலை கையிலெடுத்த பராக் - திவாட்டியா

12 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியிருந்தது ஹைதராபாத். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் கண்ட்ரோலை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட ரியான் பராக்கும், ராகுல் திவாட்டியாவும் 47 பந்துகளில் 85 ரன்களை குவித்து வெற்றியை வசமாக்கியிருப்பார்கள். 

10.அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பராக்

திவாட்டியா பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது பேட்டிங் திறனை நிரூபித்த நிலையில் யாருமே எதிர்பார்த்திடாத சமயம் பார்த்து ஹைதராபாத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பராக். இந்த சீஸனின் இதற்கு  முந்தைய நான்கு போட்டிகளில் 23 ரன்களை மட்டுமே குவித்த பராக் இந்த ஒரே ஆட்டத்தில் 42 ரன்களை குவித்து அசத்தி விட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com