துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.
இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்கள்
1. பேர்ஸ்டோ VS சஹார்
ஹைதராபாத் அணியின் பலம் அதன் ஓப்பனிங் இரட்டையர்கள் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் தான். இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை பல ஆட்டங்களில் கொடுத்துள்ளனர். சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும் பட்டாஸை அமர்க்களப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி வெளியேறினார் ஜானி பேர்ஸ்டோ. தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் போல்டானார் பேர்ஸ்டோ. 133.8 கிலோ மீட்டர் வேகத்தில் லெக் ஸ்டம்பை குறிவைத்து வீசப்பட்ட பந்தை பேர்ஸ்டோ மிஸ் செய்ய அது அவரது காலில் பட்டு ஸ்டம்பை தகர்த்தது.
2. டுபிளிசிஸ் கேட்ச்
சாவ்லா வீசிய 11வது ஓவரில் கிரீஸை விட்டு வெளியே வந்து பந்தை சிக்ஸ் அடிக்க முயன்றார் வார்னர். ஆன் சைடில் பீல்டராக நின்று கொண்டிருந்த டுபிளிசிஸ் சிக்ஸராக வேண்டிய பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார். முதல் முயற்சியிலேயே பந்தை பிடித்திருந்தாலும் பவுண்டரி லைனில் பேலன்சை இழந்ததால் பந்த மேலே தூக்கி போட்டு இரண்டாவது முயற்சியில் பிடித்திருப்பார். நின்று நிதானமாக கேட்சை பிடித்து வார்னரை வெளியேற்றி இருப்பார் டுபிளிசிஸ்.
3. வில்லியம்சன் ரன் அவுட்
வார்னர் அவுட்டான அடுத்த பந்திலேயே ஸ்கொயர் லெக் திசையில் பந்தை தட்டி விட்டு சிங்கிள் எடுக்க வில்லியம்சன் முயல அதற்கு எதிர் திசையில் நான்-ஸ்ட்ரைக்கராக நின்று கொண்டிருந்த பிரியம் கார்க் கம்பெனி கொடுக்காததால் பாதி பிட்சில் ஓடி வந்து மீண்டும் கிரீஸுக்கு திரும்ப எடுத்த முயற்சியில் ஃபீல்டர் ராயுடு அடித்த த்ரோவினால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
4. பேசுப்பொருளான கார்க் - அபிஷேக் ஷர்மா பார்ட்னர்ஷிப்
பேர்ஸ்டோ, பாண்டே, வார்னர், வில்லியம்சன் என ஹைதராபாத் வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இளம் பேட்ஸ்மேன்கள் பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் ஷர்மா. இருவரும் 77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
5. பட்டையை கிளப்பிய பிரியம் கார்க்
ஒற்றை ஆளாக கடைசி பந்து வரை போராடி ஹைதராபாத் அணி 164 ரன்களை எட்ட மிக முக்கிய காரணமாக அமைந்தது பிரியம் கார்கின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ். 26 பந்துகளில் 51 ரன்களை ஸ்கோர் செய்திருந்தார் பிரியம் கார்க். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
6. வாட்சன் அவுட்
சென்னை அணி இந்த போட்டியில் வென்று பெரிய கம்பேக் கொடுக்கும் என்ற பலத்த எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் அவுட்சைட் ஆப் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்தை பவுண்டரி அடிக்க முயன்று இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பில் பட்டு வெளியேறினார் வாட்சன்.
7. ராயுடு VS நடராஜன்
காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ராயுடு பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்க ஹைதராபாத்துக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் வீசிய பந்தை முற்றிலும் மிஸ் செய்த ராயுடு போல்டாகி வெளியேறினார்.
8.ரன் அவுட்டான டுபிளிசிஸ்
சென்னை அணியின் ஒரே நம்பிக்கையான IN FORM பேட்ஸ்மேனான டுபிளிசிஸ், பவர் பிளெயின் கடைசி பந்தில் கேதார் ஜாதவ் சிங்கிள் எடுக்க முயன்றபோது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து ஸ்ட்ரைக்கர் எண்டிற்கு ஓடிவந்த டுபிளிசிஸ் கார்க் அடித்த த்ரோவினால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
9. கடைசி வரை போராடிய ஜடேஜா
சென்னை பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டை இழக்க கேப்டன் தோனியோடு கூட்டு சேர்ந்து ஹைதராபாத் பந்து வீச்சை ஒரு கை பார்த்தார் ரவீந்திர ஜடேஜா.
35 பந்துகளில் 50 ரன்களை குவித்து அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
10. திருப்புமுனையாக அமைந்த 19வது ஓவர்
இரண்டாவது இன்னிங்ஸின் 19வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசியிருந்தார். இரண்டாவது பந்தை வீச ஓடி வந்த போது கால் சறுக்கியதால் பெவிலியன் திரும்பினார் புவனேஷ்வர். அந்த ஓவரில் மீதமிருந்த ஐந்து பந்துகளை கலீல் அகமது வீச தோனி ஒரு விளாசு விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இறுதி வரை போராடிய தோனி சென்னையின் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்களை ஸ்கோர் செய்யமுடியாமல் தவித்தார்.
ஹைதராபாத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது கேப்டன் வார்னரின் கேப்டன்சி.