ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிதான் நடப்பு தொடரில் சென்னையில் நடக்கும் கடைசிப் போட்டியாகும்.
முதல் 3 ஆட்டங்களில் தோற்ற ஹைதராபாத் அணி ஒரு வழியாக பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது. அதே உத்வேகத்துடன் அந்த அணியினர் களம் காணுவார்கள். டெல்லி அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
சென்னை மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 130 அல்லது 140 ரன்களையே அடித்து வருகின்றன. இந்த மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருப்பதால் டெல்லி அணியில் அமித் மிஸ்ரா, அஸ்வின் இருவரும் இடம்பெறுவார்கள். பேட்டிங்கை பொறுத்தவரை டெல்லியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் அசத்தல் பார்மில் இருக்கிறார்கள்.
அதேபோல ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை ரஷித் கானை பெரிதும் நம்பியிருக்கிறது. ஆனால் ஒப்பீட்டு அளவில் டெல்லி அணி பலமான அணியாக திகழ்ந்தாலும், ஹைதராபாத்தை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் இந்தப் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.