வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதன் முதல் ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியது. இதையடுத்து டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு நேற்று மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இரு அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இன்று நடைபெறவிருந்த போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரும் ரத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.