தோனி! அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். அன்றுடன் இந்திய கிரிக்கெட்டின் ஒரு வெற்றி சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்றும் அந்த பெயர் கொண்டாட்டப்படுகிறது. பலருக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஆர்ப்பரிப்பை வரவழைக்கிறது. ஏன் தோனி என்றால் எல்லோருக்கும் பிடிக்கிறது?
என்னைப் போல ஒருவன்!
நீண்ட முடியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து வழக்கத்திற்கு மாறான ஆக்ரோஷமான பாணியில் எதிரணியை துவம்சம் செய்த போது தோனி பலருக்கும் அறிமுகம் ஆகியிருப்பார். ஆனால் மற்ற வீரர்களை விட அவர் ஏன் மனதுக்கு நெருக்கமானார்? ஏனென்றால் அவரும் நம்மைப்போல எளிமையான பின்னணியில் இருந்து உருவானவர் என்பதால்தான்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடுத்தர குடும்பத்தில் வீட்டின் கடைக்குட்டியாக பிறந்தவர்தான் தோனி. நம் எல்லோர் வீடுகளைப் போலவும் தோனிக்கும் தனக்கு பிடித்த கிரிக்கெட்டை நோக்கிச் செல்ல வீடும் உறவுகளும் தடையாக இருந்துள்ளன. ஆனால் அதையெல்லாம் மீறி தோனி தொட்ட உயரங்கள்தான் அவரை பலரது மனக்கோட்டைக்குள் அமர்த்தி இருக்கிறது. என்னைப் போல ஒருவர் அவர் என்ற எண்ணமும் ஒரு பெருமிதத்தையும் கடத்தவல்லவர் தோனி.
அணி வீரர்களை அரவணைத்து செல்லும் போக்கு!
அணிக்குள் வீரராக நுழையும்போது தோனியிடம் அடிக்கடி வெளிப்பட்ட ஆக்ரோஷம் கேப்டன் பதவியை நோக்கி அவர் நகர்ந்தபோது அது குறையத் துவங்கியது. ஏகப்பட்ட சீனியர் வீரர்கள் இருந்த காலத்தில் தலைமையேற்று மூன்று ஐசிசி கோப்பைகளை அவரால் வெல்ல முடிந்ததற்கு காரணம் சக வீரர்களை அரவணைத்து சென்றதே ஆகும். அதற்காக அவர் கேப்டன் பதவியில் இருக்கும்போது இந்திய அணி அமைதிப் பூங்காவாக திகழவில்லை. புயல் பூமியாக தான் இருந்தது. ஆனால் அந்த புயலையும் சமாளித்து அணியை கரைசேர்த்தவர் தோனி என்பது அவர் மீதான மதிப்பை உயர்த்த முக்கிய காரணம் ஆகும்.
எதிரணிக்கும் அவர் ஜென்டில்மேன்தான்!
விளையாட்டில் வெற்றிதான் பிரதான இலக்கு. அது எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று விளையாடும் பலரைப் பார்த்து சலித்து போயிருப்போம். ஆனால் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று தனக்கு ஒரு பாணியை வைத்து விளையாடிய தோனி கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கப்பட்டார். எதிரணி வீரருக்கு அடிபட்டால் அவரது அணி உதவியாளர்கள் வரும்வரை தோனி வேடிக்கை பார்க்காமல் தன்னால் ஆனதை செய்யத் துவங்கி இருப்பார். அவரின் இந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தான் பலரையும் “அட” சொல்லவைக்க அடிப்படைக்காரணம் ஆகும்.
ரசிகர்களிடமும் அன்பைப் பொழியும் தோனி!
தோனிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் செய்யும் எந்தச் செயலையும் தோனி சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று தன் ரசிகர்களிடம் குறும்புத் தனத்தோடு தோனி பலமுறை விளையாடி இருக்கிறார். மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் தன்னை நெருங்கி வரும்போது ஓடிப் பிடித்து விளையாடி ஆட்டம் காண்பித்த தோனியை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதை போல, ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற தோனி எப்போதோ முடிவு செய்து விட்டார். ஆனால் அந்த முழு ஓய்வு அறிவிப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டுதான் அறிவிக்க வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார். அந்த அளவிற்கு அவருக்கு சென்னை மீதும் சிஎஸ்கே ரசிகர்கள் மீது பாசம் அதிகம். இந்திய கிரிக்கெட்டில் நிகழாமல் போன பிரமாண்ட பிரியாவிடை, சென்னையில் அவருக்கு நிகழ வேண்டும் என்று ரசிகர்களும் சின்ன வருத்ததுடன் காத்திருக்கின்றனர்.
சச்சின் அவுட்டான பிறகும் ஆட்டத்தை விறுவிறுப்பாக முன்னெடுத்துச் சென்றவர்!
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பலருக்கும் நினைவிருக்கும். சச்சினின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் ஆஸ்திரேலியாவின் இலக்கு. அவரது விக்கெட்டை வியூகம் அமைத்து வீழ்த்தியது ரிக்கி பாண்டிங் படை. அதோடு சரி! தோல்வி உறுதி என பல ரசிகர்கள் அடுத்தடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்கள்., காலச் சக்கரத்தில் கொஞ்சம் முன்னோக்கி வாருங்கள். 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! 18 ரன்களில் சச்சின் அவுட்! ஆனால் யாரும் டிவியை அணைக்கவில்லை. கம்பீருக்காக பார்த்தார்களா! சரி! அவரும் 97 ரன்களில் காலி! ஆனால் டிவி அணைக்கப்படவில்லை! ஏனென்றால் நம்பிக்கை ஒளியை ஏந்தியிருந்தார் தோனி! இருக்கை நுனியில் எல்லோரும் அப்போட்டியை பார்த்திருப்போம்! அந்த இறுதி சிக்ஸரில் துள்ளி குதித்திருப்போம். அத்தனையையும் செய்தது தோனிதான்!
தோனி களத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு எப்படியும் வென்று விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கும். எதிரணிக்கோ மரண பயம் எகிறிக் கொண்டிருக்கும். இது பூதாகரமாக்கிச் சொல்லும் தகவல் அல்ல! ஒரு உண்மையான தரவு! ஒருநாள் போட்டிகளில் 2வது இன்னிங்சில் தோனி ஆட்டமிழக்காமல் நாட் அவுட்டாக இருந்த போட்டிகள் 51 ஆகும். அதில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகள் 49 ஆகும். தோனி களத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எதிரணிக்கு திகில் தருணங்களே!
இந்திய அணியிலேயே ரசிகர் பட்டாளம்
ஒரு வீரருக்கு அணிக்கு வெளியே மக்கள் மத்தியில் ரசிகர்கள் பட்டாளம் உருவாவது என்பது இயல்புதான். ஆனால், தோனிக்கோ அணிக்குள்ளேயே மிகப்பெரிய மரியாதை கொண்ட கூட்டம் இருக்கிறது. இதில் சின்ன தல என அன்போடு அழைக்கப்படும் ரெய்னா முதல் ரோகித் சர்மா வரை பெயர் பட்டியல் நீளும். காரணம் இல்லாமல் இந்த அன்பும் மரியாதையும் உருவாகவில்லை. மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் சர்மாவை திடீரென ஓப்பனராக புரமோட் செய்தார் தோனி. அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய ரோகித் சர்மா, அந்த நன்றியை மறவாமல் பல தருணங்களில் குறிப்பிட்டு சொல்லியும் இருக்கிறார். பல வீரர்கள் சொதப்பும் நேரங்களில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கூடுதலாக விளையாட போட்டிகளில் வாய்ப்பும் வழங்குவார் தோனி. இந்த செயலை எத்தனையோ வீரர்கள் அவ்வவ்போது நினைவும் கூர்வார்கள். இதில் விராட் கோலியும் அடங்குவார். அதனால், விராட் கோலி கேப்டன் ஆன பிறகும் பல நாட்கள் தோனியை மறைமுகமாக கேட்பனாக செயல்பட்டார். விராட் கோலியும் எந்தவித தயக்கும் இல்லாமல் களத்திலேயே ஆலோசனை கேட்டு வந்தார்.
தோனியின் காலத்தில் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அவர் மட்டுமே காரணம் இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால், ஒரு வீரரின் உள்ளே இருக்கும் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வர ஏதோ ஒரு வகையில் தோனி காரணமாக இருப்பார். களத்தில் சாஹல், குல்தீப் போன்ற ஸ்பின்னர்களுடன் தோனி சேர்த்து நிகழ்த்தும் மேஜிக்குகளை பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது புரியும். அதுதான் வீரர்களுக்கும் ஒரு கேப்டனுக்கும் இடையிலான ஒரு பாண்ட். அந்த பிணைப்பு தான் அவர் மீது அளவுகடந்த மரியாதையையும் அன்பையும் பொழிய வைத்தது. வீரர்களே மதிக்கும் வீரர் என்பதால் ஒரு லீடராக ரசிகர்கள் மனதில் தோனி நிலைத்துவிட்டார்.