‘சிம்ம சொப்பனம்’ சவுரவ் கங்குலி - சில சிறப்பான தருணங்கள்

‘சிம்ம சொப்பனம்’ சவுரவ் கங்குலி - சில சிறப்பான தருணங்கள்
‘சிம்ம சொப்பனம்’ சவுரவ் கங்குலி - சில சிறப்பான தருணங்கள்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்தநாளான இன்று அவரது கிரிக்கெட் வாழ்வில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம். 

கிரிக்கெட் ரசிகர்களால் ‘தாதா’ என்ற பாசத்துடன் அழைக்கப்படுபவர் சவுரவ் கங்குலி. இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் முதன்முறையாக களமிறங்கினார். எனினும் அந்தத் தொடரில் அவர் சிறப்பாக சோபிக்கவில்லை. மேலும் அந்தத் தொடரில் அவர் சக வீரர்களுக்கு குளிர்பானம் தூக்கி செல்ல மறுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து அவர் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை காட்டவில்லை. 

1996ஆம் ஆண்டு லாட்ஸ் போட்டி:

இதனையடுத்து சவுரவ் கங்குலிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் ரஞ்சி கோப்பை போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் கங்குலி நிரூபித்தார். எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் லாட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் கங்குலி களமிறங்கினார்.

இந்தப் போட்டி அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கங்குலி சதம் அடித்தார். இதன்மூலம் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் நின்றுவிடாமல் தனது அடுத்த ஆட்டத்திலும் சதம் கடந்து கங்குலி அசத்தினார். 

2001 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம்:

2001ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு ஃபாலோ ஆன் (follow on)  வழங்கியது. இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய இந்திய அணி விவிஎஸ் ல‌ஷ்மண்(281) மற்றும் ராகுல் திராவிட்(180) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 657 ரன்கள் குவித்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். அத்துடன் முதன்முறையாக இந்திய அணி ஃபாலோ ஆன் ஆன பிறகும் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் அப்போது சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது, கங்குலியின் கேப்டன் பதவி காலத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. 

2002 லாட்ஸ் மைதானம்:

2002ஆம் ஆண்டு  லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி கங்குலி(60) யுவராஜ் சிங்(69) மற்றும் முகமது கைஃப் (87) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இதன்மூலம் நாட் வெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் இறுதியில் கங்குலி தனது டி ஷர்ட்டை கழற்றி வீசியது மிகவும் பிரபலமானது. 


2006 கங்குலி அணிக்கு மீண்டும் திரும்பியது:

கேப்டன் கங்குலியின் ஃபார்ம் குறைந்ததால் மேலும் அவருக்கு பயிற்சியாளர் கிரேக் சாப்பல் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் தனது கடின உழைப்பு மற்றும் போராடும் குணத்தால் மீண்டும் 2006ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வானார். அப்போது இந்திய அணிக்கு ஒரு அனுபவம் வாய்ந்த நடுகள ஆட்டக்காரர் தேவைப்பட்டார். ஆகவே இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 

இதனையடுத்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கங்குலியால் இந்தத் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாது என்றனர். எனினும் இவர்களின் விமர்சனத்திற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்த கங்குலி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 51 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன்மூலம் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

2008 கடைசி டெஸ்ட் போட்டி:

இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய கங்குலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு மட்டும் 9 போட்டிகளில் விளையாடிய கங்குலி, 1024 ரன்கள் குவித்தார். அப்போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “கங்குலி இவ்வளவு சிறப்பாக விளையாடி நான் பார்த்தே இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் முடிவில் கங்குலி தன் ஓய்வை அறிவித்தார். கங்குலியின் கடைசி போட்டிக்கு  தோனி கேப்டனாக இருந்தார். ஆட்டத்தின் கடைசி சில நேரங்களுக்கு மட்டும் இந்திய அணியின் கேப்டனாக  கங்குலியை அமர்த்தி அழகு பார்த்தார் தோனி. இதன் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய கேப்டனுக்கு தோனி, ஒரு சிறப்பான பிரியாவிடை கொடுத்தார். தோனியின் இந்தச் செயல் அனைவரையும் மனம் நெகிழ செய்தது. 

இத்தனை சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் கங்குலி தன்னை ஒவ்வொரு முறையும் சுவரின் மீது எறிந்த கல்லை போல் மிகவும் வலிமையாக திரும்பி வந்தார். இதனாலேயே ஓய்வு பெற்ற பிறகும் அவர் ரசிகர்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com