இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் லாகூருக்கு இன்று காலை வந்து சேர்ந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி, கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே மட்டும் விளையாடியது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை வீரர்கள் மறுத்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில், டெஸ்ட் தொடரை இலங்கை வென்றது. ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் அபுதாபியில் நடந்தது. இரண்டிலும் பாகிஸ்தான் வென்றது. மூன்றாவது போட்டி பாகிஸ்தானின் லாகூரில் இன்று மாலை நடக்கிறது. ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சொல்லி, அங்கு செல்வதற்கு முன்னணி வீரர்கள் மறுத்துவிட்டனர்.
அவர்கள் விலகியதை அடுத்து, இரண்டாம் நிலை கிரிக்கெட் வீரர்களை கொண்டு அந்த அணி கடைசி டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது.
இதற்காக துபாயில் இருந்து அந்த அணி, லாகூருக்கு இன்று காலை வந்தது. இதையடுத்து லாகூர் நகர் முழுவதும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஓட்டல்கள், மால்கள் மற்றும் வீரர்கள் மைதானத்துக்கு செல்லும் வழிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.