ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ர கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தத் தொடரில் முகமது சிராஜ் வழக்கமான மற்ற வீரர்களை போன்று சாதாரண சூழ்நிலையில் விளையாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் அவரது தந்தை காலமானார். அவரது இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை. தந்தையின் இழப்பு அவரை மிகப்பெரிய அளவில் பாதித்தது.
இது குறித்து பேசிய சிராஜ் "எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் சந்தோசம் அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆசிர்வாதத்தால் தற்போது ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளேன்.இந்திய அணியில் இடம் பிடித்து ஐந்து விக்கெட் வீழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை இருந்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இன்ற ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியது. இந்திய வீரர்களுக்கு அவர்களது நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் திரும்பிய முகமது சிராஜ் தன்னுடைய தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அவரது கல்லறையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். சிராஜ் தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.