“அந்த பையன்கிட்ட என்னமோ இருக்குப்பா” - விமர்சனங்களை உடைத்தெறிந்து No.1 ஆன சிராஜ்!

“அந்த பையன்கிட்ட என்னமோ இருக்குப்பா” - விமர்சனங்களை உடைத்தெறிந்து No.1 ஆன சிராஜ்!
“அந்த பையன்கிட்ட என்னமோ இருக்குப்பா” - விமர்சனங்களை உடைத்தெறிந்து No.1 ஆன சிராஜ்!
Published on

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் 1 பவுலராக முன்னேறி அசத்தியுள்ளார், இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஆல்ரவுண்டரான கபில்தேவிற்கு பிறகு, இந்திய நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ரா 2017ஆம் ஆண்டு, ஒருநாள் போட்டியில் ஐசிசியின் நம்பர் 1 வீரராக மாறி, அதை எட்டிய இந்தியாவின் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை தக்கவைத்துகொண்டார். இந்நிலையில் பும்ரா அணியில் இல்லாத நிலையில், அவருடைய இடத்தை நிரப்பும் விதமாக, 5 வருடங்களுக்கு பின் ஐசிசியின் நெம்பர் 1 வேகப்பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டி அசத்தியிருக்கிறார் முகமது சிராஜ். இந்தியாவின் 3ஆவது வேகப்பந்து வீச்சாளாராக உலகின் நம்பர் 1 பவுலர் என்ற இந்த சாதனையை படைத்ததையொட்டி, சக இந்திய வீரர்கள், முன்னாள் இந்திய வீரர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழைகளை பெற்று வருகிறார் சிராஜ்.

ரன் மெஷின் பவுலர் - இவரெல்லாம் எதற்கு அணியில் எடுக்குறீங்க?!

2017ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான முகமது சிராஜ், அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலராகவே இருந்துவந்தார். விக்கெட்டுகளை எடுத்தாலும், முக்கியமான டெத் ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுப்பதால், ரன் மெஷின் பவுலர் என்றும், முன்னாள் இந்திய பவுலர் டிண்டாவை ஒப்பிட்டு டிண்டா கம்பெனி என்றும் ட்ரோல் மெட்டீரியலாகவே இருந்துவந்தார். அதற்கும் மேலாக ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலராக தொடர்ந்து இருந்துவந்ததால், இந்திய ரசிகர்களுக்கான கலாய்க்கும் நபராக இருந்துவந்தார் சிராஜ்.

டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 10 எக்கானமியும், ஐபிஎல் போட்டிகளில் 9 எகானமியும் வைத்திருக்கும் சிராஜ், அப்படியே எதிர்மறையாக டெஸ்ட் போட்டிகளில் 3 எகானமியும், ஒருநாள் போட்டிகளில் 4.5 எகானமியும் வைத்திருக்கிறார்.

தந்தையை இழந்த நேரத்தில் தனிமைபடுத்தப்பட்ட சிராஜ்!

2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்திருந்தார் முகமது சிராஜ். அப்போது அவர் கொரோனா காலங்களுக்காக 14 நாட்கள் தனியறையில் தனிமைப்படுத்திருந்த நிலையில் தான், ரிக்ஷா டிரைவரான அவரது தந்தை இறந்தது தெரியவந்தது. அப்போது தனியறையில் இருந்த அவருக்கு ஆறுதல் கூற கூட ஒருவரும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. 14 நாட்களுக்கு பிறகு தான் அவர் அணியினரோடு கலந்துகொண்டார்.

தந்தையை இழந்து ஆஸ்திரெலிய அணிக்கு எதிராக விளையாடிய சிராஜ், அவருடைய அற்புதமான திறைமையை வெளிக்கொண்டுவந்தார். அதுவரை ட்ரோல் மெட்டீரியலாக பார்க்கப்பட்ட சிராஜை, இந்திய ரசிகர்கள் “அந்த பையன்கிட்ட என்னமோ இருக்குபா” என்பது போல் பார்க்கத் தொடங்கினர். அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

டெஸ்ட் போட்டிகள் மட்டுமில்ல அனைத்து பார்மேட்டிலும் என்னால் முடியும்!

டெஸ்ட் போட்டிகளில் லேட் சீம் வேரியேசன், கூர்மையான பவுன்சர் மற்றும் அற்புதமான குட் லெந்த் பந்துவிச்சால் விக்கெட்டுகளை வாரிகுவித்த சிராஜ். ஒருநாள் போட்டிகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளிலும் கலக்கத்தொடங்கினார்.

இந்நிலையில், தற்போது நடந்துமுடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகளில் மட்டும், 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிராஜ், அவருக்கான பரிசாக தற்போது உலகின் நம்பர் 1 பவுலராக மாறியுள்ளார்.

”அவர் ஒரு முழு சீம் பவுலர் போல் தெரிகிறார்” - சன்ஜய் மஞ்ரேக்கர்

சிராஜை புகழ்ந்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் சன்ஜய் மஞ்ரேக்கர், ”சுப்மன் கில் இரட்டை சதம் அடிப்பதை விட, கடினமான நேரங்களில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசுவது சவாலான ஒன்று. அதை அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் சிராஜ் செய்துள்ளார். ஒரு முழுமையான சீம் பவுலராக மாறி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

”அணிக்கு தேவைப்படும் போது ஒரு வீரராக அவர் இருக்கிறார்”- ஹர்திக் பாண்டியா

முன்னதாக சிராஜ் குறித்து தெரிவித்திருந்த இந்தியாவின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா, “அணிக்கு என்ன தேவை படுகிறதோ, அப்போது சிராஜ் அதை எடுத்து வருகிறார். அணி கடினமான நிலையில் இருக்கும் போது மாற்றத்தை ஏற்படுத்தும் வீரராக மாறி சிராஜ் மாறியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் நம்பர் 1 டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ், தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் முகமது சிராஜிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரசிகரகளும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com