வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் புஜாரா சதங்கள் அடித்த நிலையில், 258 ரன்களுடன் இந்திய அணி தனது ஆட்டத்தை நிறைவு செய்வதாக டிக்ளேர் செய்தது. இதனையடுத்து வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 513 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஜஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு துவங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக புஜாரா 90 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும் எடுத்திருந்தனர். துவக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (22) மற்றும் சுப்மன் கில் (20) விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் சுழற் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் நெருக்கடியால், வங்கதேச அணியில் ஒருவர் கூட 30 ரன்களை தாண்டவில்லை. அந்த அணி சார்பில் அதிகப்பட்சமாக முஷ்பீர் ரகுமான் 28 ரன்கள் எடுததார். சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
வங்கதேச அணி இன்று பாலோ ஆன்- ஆன நிலையிலும், இந்திய அணியே தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சைப் போன்று இரண்டாவது இன்னிங்சிலும் (23) துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் விரைவாக ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சர்வதேச டெஸ்ட் தொடரில் தனது முதல் சதத்தை 148 பந்துகளில் பதிவு செய்தார். மேலும் புஜாரா மற்றும் சுப்மன் கில் வலுவான கூட்டணி அமைத்தனர். 110 ரன்கள் எடுத்த நிலையில், சுப்மன் கில், ஹசன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 130 பந்துகளில் தனது 19-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். சுமார் 51 (2019 ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டி) இன்னிங்சிற்குப் பிறகு புஜாரா தனது சதத்தை பதிவுசெய்துள்ளதுடன், குறைவான பந்துகளில் சதம் அடித்தது இதுவே முதல்முறை.இந்நிலையில், புஜாரா சதத்தை நிறைவுசெய்தவுடன், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்துள்ளது. விராட் கோலி (19) மற்றும் புஜாரா (102) களத்தில் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 513 ரன்கள் முன்னிலையில் உள்ளது.