வெற்றி ரன்களை அடித்த சுப்மான் கில், விராட் கோலி பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தி உள்ளது.
இப்போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் அடித்தார். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலக்கை எட்டி வெற்றி வெற்றி பெற்றதும் குஜராத் அணி வீரர்கள் உற்சாகமாக மைதானத்திற்கு வந்து வெற்றியை கொண்டாடினர்.
வெற்றி ரன்களை அடித்த சுப்மான் கில், ஹெல்மெட்டை கழற்றிவிட்டு, பேட்டை சுழற்றி, நெஞ்சை நிமிர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுப்மான் கில்லின் இந்த வெற்றி கொண்டாட்டம் விராட் கோலியை நினைவுப்படுத்துவதாக இருந்தது. ஏனெனில் விராட் கோலி இதேபோன்று பல போட்டிகளில் நெஞ்சை நிமிர்த்தி ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சியை பார்த்திருக்கலாம். இதையடுத்து விராட் கோலியின் பழைய புகைப்படங்களோடு சுப்மான் கில்லின் நேற்றைய புகைப்படத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வெற்றி குறித்து பேசிய சுப்மன் கில், வெற்றி பெற்றுள்ள அணியில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.