கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ரூ.600 தேவைப்பட்டு, ஆனால் அதனை திரட்ட முடியாததால் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டதாக மறைந்த நடிகர் இர்ஃபான்கான் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான். இவர், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். "பான் சிங் டோமர்" படத்துக்காக தேசிய விருதை பெற்ற இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் (neuroendocrine tumour) எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் நடிப்பில் வெளியான "லன்ச் பாக்ஸ்" திரைப்படம் பாஃபடா விருதுகளுக்கான பட்டியலுக்கும் சென்றது.
இரண்டு வருடங்களாக இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2014 இல் டெலிகிராப் இந்தியா நாளிதழக்கு பேட்டியளித்த இர்ஃபான் கான் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார், இப்போது அந்தப் பேட்டிகள் வைரலாகி வருகின்றன "நான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன். ஜெய்பூர் அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்தேன். சி.கே. நாயுடு கிரிக்கெட் போட்டிக்கு நான் தேர்வாகினேன். ஆனால் போட்டிக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. அப்போது என்னால் ஒரு 600 ரூபாய் கூட திரட்ட முடியவில்லை. அப்போது முடிவெடுத்தேன் கிரிக்கெட்டை என்னால் தொடர முடியாது என்று" என கூறியுள்ளார்.
மேலும் அந்தப் பேட்டியில் "மிகவும் பெருமை வாய்ந்த தேசிய நாடக் குழு பள்ளியில் சேர்வதற்காக ரூ.300 தேவைப்பட்டது, அதவும் என்னிடம் இல்லை. ஆனால் நல்வாய்ப்பாக என்னுடைய சகோதரி எனக்கு பணத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்தார். கிரிக்கெட்டை வைவிடுவது என்பது உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல நன்றாக யோதித்தே எடுத்தேன். எப்படி இருந்தாலும் நாட்டுக்காக 11 பேர் தானே விளையாட முடியும், ஆனால் கலைஞனாகிவிட்டால் அதவும் நடிகராகிவிட்டாலும் காலம் முழுவதும் நடிக்கலாமே என்ற எண்ணமும் ஓர் காரணம். அதுவும் இப்போது வந்திருக்கும் டி20 கிரிக்கெட் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது" என இர்ஃபான் கான் தெரிவித்திருந்தார்.