நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரர். டிரெஸ்சிங் ரூமில் உங்கள் அப்பாவே, இன்னொரு வீரராக உங்களருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரேன் சந்தர்பாலும் அவர் மகன் தகிநரேனும்.
மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சந்தர்பாலின் மகன் தகிநரேன் (Tagenarine ) அப்பாவின் அடியொற்றி, இளம் வீரராக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவருக்கு வயது 21. அப்பாவுக்கு வயது 43.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சந்தர்பால், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், இப்போது கயானா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சூப்பர் 50 கோப்பை கிரிக்கெட் போட்டி அங்கு நடந்துவருகிறது. இதில் சந்தர்பாலும் அவர் மகன் தகிநரேனும் கயானா ஜாகுவார்ஸ் அணிக்காக ஆடுகிறார்கள். இருவரும் ஒரே டிரெஸ்சிங் ரூமில் இருந்தால் மகனுக்கு டென்ஷனாக இருக்காது?
‘ம்ஹூம். அவர் ஜாலியான ஆள். நான் எப்போதும் அவராக முடியாது. அது எனக்கு தெரியும். எனக்கு அவர் பிரெண்ட் மாதிரிதான். அவர் பக்கத்துல இருக்கிறது எனக்கு நல்லது. டிப்ஸ்கள் கொடுப்பார். நான் எனது விளையாட்டை விளையாட விரும்புறேன்’ என்கிறார் தகிநரேன்.
சந்தர்பால் கூறும்போது, ‘கடந்த சில வருடங்களாக தகி உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறான். அவன் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இள வயது என்பதால் இன்னும் கற்க வேண்டி இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்தி விளையாட வேண்டும். அதில் தன்னை நிரூபிக்க வேண்டும்’ என்கிற சந்தர்பால், மகனுக்கு அட்வைஸ் எதுவும் பண்ணுவதில்லை என்கிறார்.
‘விளையாட்டு என்று வந்துவிட்டால், கொஞ்சம் ஜாலியா இருக்கணும். நான் மேற்கு இந்திய அணிக்குள் வந்தபோது கென்னத் பெஞ்சமின், அம்புரோஸ் ஆகியோர் அடிக்கடி ஜோக்கடித்துக் கொண்டே இருப்பார்கள். அது தேவையானதும் கூட. ஆனால், களத்துக்குள் இறங்கிவிட்டால் சீரியசாகிவிடுவார்கள். அதே போல நாங்களும் ஜோக்கடித்துக்கொண்டே இருக்கிறோம்’ என்கிறார் சந்தர்பால்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் இருவருமே அரைசதம் அடித்து சாதனை படைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.