சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த பிரச்னையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்தியும் இன்று முதல் ஷீரடியில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர்.
கோயிலைச் சுற்றியுள்ள அந்நகர மக்களும், சுற்றுவட்டார 12 கிராமங்களை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் சாய்பாபா கோயில் வழக்கம்போல திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாகவே மக்கள் கூட்டம் காணப்படுகிறது. எனினும், சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து முழுமையாக அறியாத பக்தர்கள் குழப்பத்துடனே தரிசனம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உலகப்புகழ் பெற்ற சாய்பாபா கோயில் உள்ளது. 102 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா சமாதி அடைந்த இடத்தில்தான் இந்த கோயில் அமைந்துள்ளது. கடந்த வாரம் பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலின் மேம்பாட்டு பணிகளுக்காகவும் அந்நகரின் மேம்பாட்டுக்காகவும் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பிறகு சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.