’பிங்க் டே’வில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தோல்வி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.
இந்த அணிகளுக்கு இடையிலான, 4 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில், 2 விக்கெட்டுக்கு 119 ரன்களுடன் (25.5 ஓவர்) சிறப்பான நிலையில் இருந்தது.
கேப்டன் டுபிளிசிஸ் (57 ரன்), அம்லா (59 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதும் அந்த அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 41 ஓவர்களில் 164 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் அந்த அணி இழந்தது. அந்த அணியின் ஏழு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணை தொடவில்லை. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி 4 விக்கெட்டுகளும், ஷகீன் ஷா அப்ரிதி, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
(ஷின்வாரி)
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்த இலக்கை 31.3 ஓவர்களில் எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 71 ரன்களும், பஹார் ஜமான் 44 ரன்களும், பாபர் அசாம் 41 ரன்களும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 4 ரன்கள் சேர்த்தார்.
இனவெறி பேச்சுக் காரணமாக, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராகவும் கேப்டனாக ஷோயிப் மாலிக்கும் செயல்பட்டனர்.
தென்னாப்பிரிக்க அணி ஒவ்வொரு ஆண்டும் ஜோகன்னஸ்பர்க்கில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நலநிதி திரட்டுவதற் காக ‘பிங்க் டே’ என்ற பெயரில் இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆட்டத் தில் இளஞ்சிவப்பு ஜெர்சி அணிந்து விளையாடினர். ‘பிங்க் டே’யில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதில்லை. பிங்க் டே-யில் நடந்த 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் முதன்முறையாக தோற்றது.