2001 ஆம் ஆண்டு ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியின்போது டிராவிட், லக்ஷமண் ஆகியோர் என் பந்துவீச்சை துவம்சம் செய்ததை மறக்கவே முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அப்போது மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் ஃபோலோ ஆன் பெற்றது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திராவிடும் லக்ஷமணும் ஒருநாள் முழுக்க விளையாடி 376 ரன்களை குவித்தனர்.
இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய ஷேன் வார்னே 34 ஓவர்கள் பந்துவீசி 152 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். அந்தப் போட்டிக் குறித்த அனுபவத்தை இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது வார்னே பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அப்போது "பந்துவீச்சை முடித்தப் பின்பு 4 ஆயிரம் ஓவர்களை வீசியது போல ஓர் உணர்வு. மைதானம் முழுக்க பந்துகளை அடித்து விளாசினார்கள். அப்போது நான் ஸ்லிப்பில் நின்றுக்கொண்டு கில்கிறிஸ்ட்டிடம் பிடித்த திரைப்படங்கள் குறி்த்து பேசினோம். தொப்பிகளை மாற்றிக்கொண்டோம். பிடித்த பாடல்கள் குறித்துப் பேசினோம். மிக முக்கியமாக அப்போது நடந்துக்கொண்டிருப்பதை மறக்க முயற்சித்தோம்" என்றார் வார்னே வேடிக்கையாக.
தொடர்ந்து பேசிய அவர் "ஆனால் லக்ஷமணும், டிராவிடும் மிக அழகாக விளையாடினார்கள். அதிலும் லக்ஷமணும் மிக அழகு, டிராவிட் மிகப் பிரமாதம். சில நேரங்களில் நாம் இதையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும்" என்றார் ஷேன் வார்னே.