ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில் இப்போதுள்ள நட்சத்திர வீரர்களான விராட் கோலியும், தோனியும் இடம்பெறவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகர்களிடையே தங்களது சமூக வலைத்தள கணக்குகள் மூலம் நேரடியாக உரையாடி வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் தனக்கு பிடித்த தலைச்சிறந்த இந்திய அணியை ஷேன் வார்னே தேர்வு செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த அணிக்கு சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே " இந்திய அணியைச் சோ்ந்த எந்த வீரா்களுடன் நான் விளையாடியிருக்கிறேனோ, அவர்களை மட்டுமே எனக்கு விருப்பமான இந்திய அணியில் சோ்த்துள்ளேன். அதனால் தோனி, கோலி போன்றவா்களை இதில் சோ்க்கவில்லை. தோனி எப்போதுமே சிறந்த விக்கெட் கீப்பா்-பேட்ஸ்மேன். கோலி அனைத்து போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன். இந்த அணியில் கங்குலிக்கு இடமளிப்பதற்காக விவிஎஸ் லஷ்மணை சோ்க்கவில்லை. எனது காலக் கட்டத்தில் சுழற்பந்துகளை கையாள்வதில் சிறந்த பேட்ஸ்மேனாக சித்து இருந்தார். அதனால் சித்துவை தொடக்க வீரராக தோ்வு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.