எவ்வளவு மன உறுதியுடன் விளையாடினாலும், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவன் ஷேன் வார்னே.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியாவில் 1969-ம் ஆண்டு பிறந்த ஷேன் வார்னே, 1992-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தான் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். சிட்னி மண்ணில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவர் அந்தப் டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். ஆனால் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும்போது 708 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
எந்த மண்ணில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினாரோ,அதே மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியையும் விளையாடினார். 90-களில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களுக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் தான் ஷேன் வார்னே. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி என்றாலே இரவு பகல் பார்க்கமால், தூங்காமல் பார்த்த காலம் உண்டு.
இந்திய வீரர் சச்சின், மேற்கிந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகிய மூவரும் இன்றளவும் கிரிக்கெட் ஜாம்பவான்களில் மும்மூர்த்திகளாக அறியப்படுவர்கள். 90-களில் இந்த 3 வீரர்களுக்கும் பொதுவான ரசிகர்கள் உண்டு. என்னதான் எதிரணி வீரராக இருந்தாலும் ஷேன் வார்னே களத்தில் வந்தாலே, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளுவர். இவர் வீசும் மாய சுழற்பந்துகளால் ஸ்டெம்புகள் தெறிக்கும். ஆனால் அவர் இன்று இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 1000 விக்கெட்டுகளை மேல் கைப்பற்றியது இருவர் தான். ஒருவர் முத்தையா முரளிதரன் மற்றொருவர் ஷேன் வார்னே. ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் வார்னே. ஷேன் வார்னே 2003-ம் ஆண்டில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இது அவரது கிரிக்கெட் வாழ்வில் கறுப்புப் பக்கமாக அமைந்தது. ஆனால், தடை முடிந்து மீண்டும் களம் கண்டபோதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினார். 2007-ம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற ஷேன் வார்னே, அதன் பின்னர் டி20 லீக் தொடர்களில் விளையாடினார்.
2008 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வார்னே வழி நடத்தினார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் தோற்கடித்து முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஷேன் வார்னே என்ற பெருமையை பெற்றார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகிய ஷேன் வார்னே அதன் பின்னர் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு மறைவு செய்தி இட்ட இவரது கடைசி பதிவே இவரது பதிவாகும்.