விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி தொடரில், குஜராத்தை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி.
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடந்து வந்தன. பெங்களூருவில் நேற்று நடந்த அரைஇறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, பார்த்திவ் படேல் தலைமையிலான குஜராத்தை எதிர்கொண்டது. தமிழக அணியில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்றிருந்தார்.
மைதானம் ஈரப்பதமாகக் காணப்பட்டதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. டாஸ் வென்ற தமிழக அணி முதலில், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணி, 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராவல் 40 ரன்களும், அக்ஷர் பட்டேல் 37 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி சார்பில் முகமது 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய தமிழக அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. அபினவ் முகுந்த் (32), தினேஷ் கார்த்திக் (47) ஆகியோர் ஓரளவு தாக்குப் பிடிக்க, இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாருக்கான், அணியை வெற்றிபெற வைத்தார்.
தமிழகம் 39 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஷாருக் கான் 56 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா - சத்தீஷ்கர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சத்தீஷ்கர் 223 ரன்கள் எடுத்தது. கர்நாடகத் தரப்பில் கவுசிக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய கர்நாடக அணி 40 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. படிக்கல் 92 ரன்களும் கே.எல். ராகுல் 88 ரன்களும் மயங்க் அகர்வால் 47 ரன்களும் விளாசினர்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில், நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் தமிழகம்-கர்நாடக அணிகள் மோதுகின்றன.