இந்திய அணியின் இளம் வீராங்கனையான ஷஃபாலி வெர்மா, உலக கிரிக்கெட்டில் தொடர்ந்து பல சாதனைகளை குவித்துவருகிறார்.
ஓவ்வொரு கால இடைவெளிக்கும் ஒவ்வொரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் உருவெடுப்பார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் மட்டும் தான் எல்லா காலத்திற்குமான வீரர்களாக உலக அரங்கில் தங்கள் சுவடுகளை விட்டுச்செல்வார்கள். அந்த இடத்திற்கு வந்த அவர்களின் பின்புலக்கதையானது, சுவராசியங்கள், ஏற்றத்தாழ்வுகள், வீழ்ச்சிகள், கடுமையான முயற்சிகள் என எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கும். அப்படி காலத்திற்குமான ஒரு வீரராக மாறும் முயற்சியில் விளையாடி, பல சாதனைகளை உலக கிரிக்கெட்டில் படைத்து வருகிறார் இந்தியாவின் இளம் வீராங்கனையான ஷபாலி வெர்மா.
முதல் சர்வதேச போட்டியில் 0 ரன்னிற்கு வெளியேறிய ஷபாலி!
2004ஆம் வருடம் பிறந்த ஷபாலி வெர்மா, தன்னுடைய 15 வயதில் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியில் 4 பந்துகளை எதிர்கொண்ட ஷபாலி, இஸ்மைல் வீசிய பந்தில் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து 0 ரன்களுக்கு வெளியேறியது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் அவர் 15 வயதிலேயே அவ்வளவு திறமையான வீரராக இருந்தார்.
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய முதல் போட்டியில் 0 ரன்களுக்கு வெளியேறுவதும், பின்னர் காலத்திற்குமான சிறந்த வீரர்களாக உருவெடுப்பதும் இந்திய கிரிக்கெட்டில் தொடர்ந்து நடந்து வரும் தொடர் கதைதான். அந்தவகையில் கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும், தன்னுடைய முதல் போட்டியில் 0 ரன்களுக்கு தான் வெளியேறியிருந்தார். அதேபோல இந்தியாவின் எப்போதைக்குமான சிறந்த கேப்டனான எம்.எஸ்.தோனியும் தன்னுடைய முதல் போட்டியில் ரன் கணக்கை தொடங்காமலே தான் பெவிலியன் திரும்பினார். அந்த வரிசையில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களும் பட்டியலில் நீண்டுகொண்டே போகின்றனர்.
குறைந்த வயதில் உலகின் நம்பர் 1 வீரராக மாறிய ஷபாலி வெர்மா!
டி20யின் அறிமுக போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய ஷபாலி தான், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருவருடத்தில், அதாவது தன்னுடைய 16 வயதில் ஐசிசியின் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்தார். இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் இவ்வளவு குறைந்த வயதில் உலகின் நம்பர் 1 வீரராக மாறிய வீரர் ஷபாலிக்கு முன்னர் யாரும் இல்லை.
உலகின் நம்பர் 1 டி20 வீரர் என்ற அந்த இமாலய இலக்கை ஷபாலி வெறும் 18 போட்டிகளில் செய்திருந்தார். குறைவான போட்டிகளில் விளையாடி நம்பர் 1 இடத்தை பிடித்த ஒரே இந்திய வீரரும் ஷபாலி வர்மா தான். அவர் நம்பர் 1 டி20 வீரராக மாறும் போது 18 போட்டிகளில் 146 ஸ்டிரைக் ரேட்டுடன், 485 ரன்களை குவித்திருந்தார்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் அடித்த முதல் வீரர்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அறிமுகபோட்டியில் விளையாடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டார் ஷபாலி வெர்மா. தன்னுடைய முதல் போட்டியை இங்கிலாந்து மண்ணில் விளையாடிய ஷபாலி வர்மா முதல் இன்னிங்ஸில் 96 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்த ஷபாலி 63 ரன்களை குவிக்க, அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 159 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் மற்றும் 3ஆவது சர்வதேச வீரராக என்ற சாதனையை படைத்தார். மேலும் முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 90 ரன்களை கடந்த சர்வதேச 8ஆவது வீரராகவும் மாறினார் ஷபாலி.
குறைந்த வயதில் 1000 ரன்களை கடந்த முதல் சர்வதேச வீரர்!
டி20 போட்டிகளில் 51 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்களுடன் 1231 ரன்களை குவித்திருக்கும் ஷபாலி வர்மா, குறைந்த வயதில் 1000 சர்வதேச டி20 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கடந்த ஆண்டு 2022ல் படைத்தார். அவர் இந்த சாதனையை 21 வயதில் படைத்திருந்த மற்றொரு இந்திய வீரரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதனையை முறியடித்து, 18 வயதில் படைத்தார்.
30 வருட சச்சின் சாதனையை முறியடித்த ஷபாலி!
இளம் வயது வீரராக சச்சின் தன்னுடைய முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்திருந்தார். 16 வயதில் அவர் படைத்திருந்த அந்த சாதனையை, 30 வருடங்கள் கழித்து தன்னுடைய 15 வயதில் சர்வதேச அரைசதம் அடித்து முறியடித்தார் ஷபாலி. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசிய ஷபாலி, 49 பந்துகளில் 70 ரன்களை அடித்து இந்த சாதனையை படைத்தார்.
உலகக்கோப்பையில் 6 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர்!
ஐசிசியின் யு-19 டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ஷாபலி வெர்மா, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் பவர்பிளேவின் 6ஆவது ஓவரில் 26 ரன்களை அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் தாபிசெங் நினியை எதிர்கொண்ட ஷபாலி, முதல் 5 பந்துகளையும் அடுத்தடுத்த பவுண்டரிகளாக மாற்றினார். கடைசி பந்திலும் பவுண்டரி அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதை சிக்சராக மாற்றிய ஷபாலி ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசி அசத்தினார்.
25 வயதுடைய ஆண் பவுலர்களை பந்துவீச சொல்லி பயிற்சி மேற்கொண்ட ஷபாலி!
கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஷபாலி அங்கிருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எழுப்பப்பட்ட வேகமான ஷார்ட் பந்துகள் மற்றும் பவுன்சர்களை விளையாடுவதில் சிரமப்பட்டார்.
இதனால் ஷார்ட் பந்துகளில் சிறப்பாக விளையாட முடிவெடுத்த ஷபாலி, 25 வயதுடைய ஆண் பவுலர்கள் பந்துவீச, ஒருநாளைக்கு 200-250 ஷார்ட் பந்துகளை எதிர்கொண்டார். அவர்களது பந்துவீச்சு 125-130 கிமீ வேகத்தில் வீசப்பட்டது.
நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க காரணமே சச்சின் தான் - ஷபாலி!
சச்சினை ரோல்மாடலாக வைத்து விளையாடி வருபவர் தான் ஷபாலி வெர்மா. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு சச்சினை சந்தித்த ஷபாலி வெர்மா, என் ஹீரோவை சந்திக்கும் எனது கனவு நிறைவேறிவிட்டதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
சச்சினை சந்தித்த பிறகு அவர் டிவிட்டர் பதிவில், “ நான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்க காரணம் சச்சின் சார் தான். எனது குடும்பம் அவருக்கு கோவில் மட்டும் தான் வைத்து வழிபடவில்லை, மற்றபடி அப்படிதான் வணங்கி வருகின்றனர். இன்று எனக்கு சிறப்பான நாள், நான் எனது ரோல்மாடலை பார்த்துவிட்டேன். இது எனது கனவு மெய்யான தருணம்” என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் டிவீட் செய்திருந்த சச்சின், “தொடர்ந்து உங்கள் கனவுகளை நோக்கி சிறப்பாக முன்னேறுங்கள், கனவுகள் எல்லாம் ஒரு நாள் உண்மையாக கூடியவை” என்று வாழ்த்திருந்தார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்மாதிரி வீரராக உருவெடுத்துவரும் வருங்கால ஜாம்பவான் கிரிக்கெட் வீராங்கனைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிருந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறது புதியதலைமுறை. மென்மேலும் இந்த இளம் கிரிக்கெட் புயல் வளர வாழ்த்துக்கள்.
-RISHAN VENGAI