ஹர்திக் பாண்டியா கடந்து வந்த விதத்தில் தேர்வுக் குழு நிச்சயம் மகிழ்ச்சியடையும் எனக் கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். முதல் அணியாக பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருந்தது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான். காயத்தால் பாதிக்கப்படிருந்த அவர், இந்தாண்டு அட்டகாசமான கம்பேக் கொடுத்தார். 487 ரன்கள் (4 அரை சதங்கள் உட்பட) மற்றும் 8 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் ஹர்திக். சில நேரங்களில் கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் விளையாடி அசத்தினார். இதனால், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பதை கண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், '' பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் பட்டைய கிளப்பி தனது இடத்தை உறுதி செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். எனவே அவர் பந்துவீசுமளவிற்கு 100 சதவீதம் ஃபிட்னெஸை பெற்றுவிட்டார். ஹர்திக் கடந்து வந்த விதத்தில் தேர்வுக் குழு நிச்சயம் மகிழ்ச்சியடையும்.
மேலும், ஒரு பேட்டராக ஹர்திக் காட்டிய ஷாட் தேர்வு அற்புதமாக இருந்தது. அவர் எல்லா பந்துகளையும் பெரிய ஷாட்டாக அடிக்க முயலவில்லை. ஏனெனில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்து பல வீரர்கள் வெளியேறி இருக்கின்றனர். ரோஹித் சர்மாவைப் போலவே, புத்திசாலித்தனமாக ஷாட் தேர்வு செய்தார். அதனால்தான் அவர் கேப்டன் பதவியைப் பெற்றவுடன், அவர் 70, 80, 100 ரன்களையும் எடுக்கத் தொடங்கினார் ”என்று அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்: முழு ஆல் ரவுண்டராக உலகக் கோப்பைக்கு தயாராகி விட்டாரா ஹர்திக் பாண்டியா?