2019-ஆம் ஆண்டிற்காக உலகக்கோப்பை இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா..? இல்லையா...? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தோனிக்கு நிகராக இதுவரை யாரும் இல்லை என வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விலகியதையடுத்து ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வருகிறார். 2019 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள தேர்வுக் குழு, வீரர்கள் முழுமையான தகுதியில் இருந்தால் மட்டும்தான் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும் என அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தோனிக்கு ஆதரவாக வீரேந்திர ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, " தோனிக்கு நிகரான மாற்று இதுவரை இல்லை. ரிஷப்பன்ட் சிறந்த வீரர்தான். ஆனால் அவர் தோனிக்கு மாற்றாக வர வேண்டும் என்றால் சிறிது காலம் எடுக்கும். அது நிச்சயமாக 2019-ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் இருக்கும். தோனி விளையாட்டில் ரன் எடுக்கிறார். ரன் எடுக்கவில்லை என்பது பிரச்னையில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு தோனி முழு உடல் தகுதியுடன் இருக்க நாம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும். மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசையில் ஆடுவதில் தோனி மிகவும் அனுபவம் பெற்றவர். அவருக்கு நிகர் யாரும் இல்லை. அதனால் 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தோனி நிச்சயமாக பங்கேற்க வேண்டும்" என்றார்.