பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவராக வினோத் ராய் நியமனம்

பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவராக வினோத் ராய் நியமனம்
பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவராக வினோத் ராய் நியமனம்
Published on

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாகக் கருதப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை (பிசிசிஐ) நிர்வகிக்கும் நிர்வாகக் குழுவின் தலைவராக மத்திய தணிக்கைக் குழுவின் முன்னாள் தலைவரான வினோத் ராயை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிசிசிஐ அமைப்பின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாததால், அந்த அமைப்பின் தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை தகுதி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் உறுப்பினர் குழுவில் இடம் பெறுபவர்களின் பெயரை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாக்கல் செய்யப்பட்டவர்களில் பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் 4 பேர் கொண்ட குழுவினை உச்சநீதிமன்றம் அறிவித்தது. முன்னாள் மத்திய தலைமை தணிக்கைக் குழு தலைவர் வினோத் ராய் தலைமையிலான அந்த குழுவில், கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, ஓய்வுபெற்ற பெண்கள் கிரிக்கெட் வீரர் டயானா எடுல்ஜி மற்றும் விக்ரம் லிமாயே ஆகியோர் கொண்ட குழு பிசிசிஐ அமைப்பினை நிர்வகிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ சார்பாக அமிதாப் சவுத்ரி மற்றும் விக்ரம் லிமாயே ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்தது. அதேபோல, பிசிசிஐ நிர்வாகக் குழுவில் மத்திய விளையாட்டுத் துறை செயலாளரையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com