சவுராஸ்டிரா அணி சாம்பியன்! தோற்றாலும் சாதனைகளால் கெத்துகாட்டிய ருதுராஜ்!

சவுராஸ்டிரா அணி சாம்பியன்! தோற்றாலும் சாதனைகளால் கெத்துகாட்டிய ருதுராஜ்!
சவுராஸ்டிரா அணி சாம்பியன்! தோற்றாலும் சாதனைகளால் கெத்துகாட்டிய ருதுராஜ்!
Published on

விஜய் ஹசாரே கோப்பையில் இறுதிப்போட்டியில் மஹாராஸ்டிரா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது உனாத்கட் தலைமையிலான சவுராஸ்டிரா அணி.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட விஜய் ஹசாரே டிரோபி இரட்டை சதங்கள், அதிக சதங்கள் என பல அதிரடி சாதனைகளால் உலக கிரிக்கெட் ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது முடிவை எட்டியுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அணி காலியிறுதியில் சவுராஸ்டிரா அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் விஜய் ஹசாரே டிரோபியின் இறுதிப்போட்டி இன்று ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான மஹாராஸ்டிரா அணிக்கும், ஜெயதேவ் உனாத்கட் தலைமையிலான சவுராஸ்டிரா அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற சவுராஸ்டிரா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மஹாராஸ்டிரா அணிக்கு தொடக்கத்திலேயே ஓபனர் பவன் ஷாவை வெளியேற்றி அதிர்ச்சியளித்தது சவுராஸ்டிரா அணி. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் மற்றும் எஸ்எஸ் பச்சாவ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது மஹாராஸ்டிரா. என்ன தான் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ருதுராஜ் சதமடித்து அசத்தினார்.

இறுதிவரை நின்று அதிக ரன்களை இலக்காக நிர்ணயிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் உனாத்கட் வீசிய பந்தில் 42ஆவது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியே, அங்கேயே ஒரு வழியாக சவுராஸ்டிராவின் வெற்றி ஒருபுறம் சாதகமாக சாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனெனில் கடந்த இரண்டு ஓவர்களில் 16,15 ரன்கள் என்று எடுக்க ஆரம்பித்திருந்தார் கெய்க்வாட். அவர் அவுட்டாகி வெளியேற தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த மஹாராஸ்டிரா அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிக சதங்கள் அடித்து ருதுராஜ் சாதனை!

இன்றைய போட்டியில் சதமடித்ததை தொடர்ந்து விஜய் ஹசாரே டிரோபியில் 12 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் ருதுராஜ் கெயிக்வாட். 11 சதங்களுடன் அன்கிட் பாவ்னே மற்றும் ராபின் உத்தப்பா இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர்.

ருதுராஜ் விளையாடிய காலிறுதி (220*), அரையிறுதி(168), (108) இறுதிப்போட்டிகள் என மூன்று நாக் அவுட் போட்டிகளிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார். மேலும் கடைசி 10 போட்டிகளில் 8 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 71 இன்னிங்ஸில் 15 சதங்கள், 16 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

பின்னர் 249 ரன்களை துறத்திய சவுராஸ்டிரா அணியின் ஓபனர்கள் தேசாய் மற்றும் ஜாக்சன் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அரைசதங்கள் அடிக்க, விக்கெட்டே இழக்காமல் 100 ரன்களை கடந்தது சவுராஸ்டிரா அணி. பின்னர் ஒருவழியாக 27ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்தது மஹாராஸ்டிரா. 50 ரன்களில் தேசாய் வெளியேற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசிவரை நிலைத்து நின்று விளையாடிய ஓபனர் ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

46.3 ஓவர்களில் 21 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஸ்டிரா அணி வெற்றி வாகை சூடியது.

2007ஆம் ஆண்டு சாம்பியன் ஆனதற்கு பிறகு 15 வருடங்களிற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது சவுராஸ்டிரா அணி. ருதுராஜ் கெயிக்வாட் தொடர் நாயகன் விருதினையும், ஷெல்டன் ஜாக்‌ஷன் ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றனர். கெய்க்வாட் 5 இன்னிங்களில் ஒரு இரட்டை சதம் உட்பட 3 சதங்கள் விளாசி 660 ரன்கள் குவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com