பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது நியமிக்கப்பட்டார்.
சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் கேப்டன் பதவியை அஃப்ரிடி துறந்தார். அதன்பின்னர் டி20 அணியின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அறிவிக்கப்பட்டார். அதேபோல பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த பிப்ரவரியில் அசார் அலி விலக, அந்த பதவியும் சர்ஃப்ராஸுக்கு வழங்கப்பட்டது. டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த மிஸ்பா உல் ஹக், சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து கேப்டன் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சர்ஃப்ராஸை கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இதன் மூலம் கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி மூன்று விதமான போட்டிகளிலும் ஒரே கேப்டனின் கீழ் செயல்பட உள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் 8ஆவது இடத்தின் இருந்த சர்ஃப்ராஸ் தலைமையிலான இளம் பாகிஸ்தான் அணி, முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றெடுத்தது.