இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டி20 போட்டியில் சிக்ஸரை தடுக்கும் விதமாக சஞ்சு சாம்சன் செய்த அபாரமான பீல்டிங் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று நியூசிலாந்து அணியை "ஒயிட் வாஷ்" செய்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதமடித்தார். ஆனால் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லரும், செஃப்ரெட் மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பும்ரா அசுரத்தனமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் பீல்டிங்கில் கலக்கினார் சஞ்சு சாம்சன். 7.5 ஓவரின் போது சைனி வீசிய பந்தை சிக்ஸருக்கு ஓங்கி அடித்தார் ராஸ் டெய்லர். சிக்ஸருக்கு சென்ற பந்தை அந்தரத்தில் பாய்ந்து பிடித்து பவுண்டரி கோட்டுக்கு வெளியே பறந்தபடியே உள்பக்கத்துக்கு வீசி சிக்ஸரை தடுத்தார் சஞ்சு சாம்சன். அவரின் பீல்டிங் முயற்சியை சமூக வலைத்தள வாசிகளும், கிரிக்கெட் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.