சர்ச்சை வேறு சஞ்சய் மஞ்சரேக்கர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத சூழலை தனுக்குத்தானே ஏற்படுதிக்கொண்டார் அவர். கடந்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் வீரர்கள் குறித்து சஞ்சய் முன்வைத்த கருத்துகள் விஷமத்தனமாகவே இருந்து வருகிறது. இவரின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக பிசிசியின் வர்ணனையாளர் குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பின்பு பிசிசிஐக்கு அவர் பலமுறை கடிதம் எழுதியும், மீண்டும் அவருக்கு வர்ணனையாளர் குழுவில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக சில காலம் அமைதியாக இருந்த மஞ்சரேக்கர் மீண்டும் தன்னுடைய திருவாயை திறந்து சர்ச்சைகளில் இடம் பிடித்து இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இடம்பெறும் சஞ்சய் கிரிக்கெட் ரசிகர்களின் திட்டுகளை தொடர்ந்து வாங்கிக்கொண்டே இருக்கிறார். இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு, யார் இந்த சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் உலகத்தின் மற்ற நாட்டு வீரர்களையும் சகட்டு மேனிக்கு சாடும் இவர் இந்தியாவுக்காக விளையாடிய காலங்களில் செய்த 'ரெக்கார்'டுகள் என்ன என்பதை தெரியப்படுத்துவது நம்முடைய கடமையாகும். அதனால் யார் இந்த சஞ்சய் மஞ்சரேக்கர் என்பது குறித்து சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.
யார் இந்த சஞ்சய் மஞ்சரேக்கர்?
55 வயதாகும் சஞ்சய் மஞ்சரேக்கர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் சஞ்சய் மஞ்சரேக்கர், 1987 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர் 2043 ரன்களை சேர்த்துள்ளார். அதில் மொத்தம் 4 சதம் , 9 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 218 ரன்களை சேர்த்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். டெஸ்ட் போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 37.14.
பின்பு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலும் சேர்கப்பட்டார் சஞ்சய். மொத்தம் 74 போட்டிகளில் விளையாடிய அவர் 1994 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும் 15 அரை சதமும் அடங்கும். அவரின் சராசரி 33.23, அதிகபட்சமாக ஒரு போட்டியில் 105 ரன்கள் எடுத்துள்ளார்.
1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக சஞ்சய் மஞ்சரேக்கர் விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் விளையாடிய அந்த 9 ஆண்டு காலத்தில் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை. ஒருநாள் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுபவர் என்று பலராலும் அக்காலக்கட்டத்தில் விமர்சிக்கப்பட்டார்.
சஞ்சயும் சர்ச்சைகளும்...
இப்போது தன்னை கிரிக்கெட் "அனலிஸ்ட்" என சொல்லும் சஞ்சய் மஞ்சரேக்கர் ஓய்வுப்பெற்ற பின்பு தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராக மாறினார். சஞ்சய் மஞ்சரேக்கரின் வர்ணனை பிரமாதமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதெல்லாம் சமூக வலைத்தளம் வருவதற்கு முன்புதான். பின்பு ட்விட்டர் வந்ததும், கிரிக்கெட் வீரர்கள் மீதான தன்னுடைய கருத்துகளை மிக மோசமாக தெரிவிக்க ஆரம்பித்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். இப்போது உலக கிரிக்கெட்டில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி மீது 2011 ஆம் ஆண்டே "சர்ஜிகல் ஸ்டிரைக்" நடத்தினார் சஞ்சய். 2011 - 2012 ஆஸ்திரேலிய தொடரில் கோலி, லஷ்மன் ஆகியோர் சிறப்பாக விளையாடவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் "லஷ்மனை அணியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை சேர்க்க வேண்டும். பின்பு கோலிக்கு இன்னொரு டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும், அதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் இல்லை என்பது தெரியும்" என்றார். இது அப்போதைய காலக்கட்டத்தில் சர்ச்சையானாலும், பின்பு கோலி செய்தது எல்லாம் வரலாறு. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் பொல்லார்டை "மூளை இல்லாதவர்" என விமர்சித்தார். மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளரான சஞ்சய் மீது ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்தனர்.
பின்பு ஜடேஜாவை "அவர் டெஸ்ட் போட்டி பவுலர், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரையோ பேட்ஸ்மேனையோ சேர்க்கலாம்" என விமர்சித்தார். அதற்கு தகுந்த பதிலடியை ஜடேஜா ட்விட்டரிலும், தன்னுடைய திறமையாலும் நிரூபித்தார். இப்போது ஜடேஜா இல்லாத இந்திய அணியை நினைத்து பார்க்கவே முடியாது. அதேபோல 2020 - 2021 ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை, பேட்ஸ்மேனாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது" என்றார். இப்போது அண்மையில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினை ஆல் டைம் பெஸ்ட் இல்லை என கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கொண்டார்.
ஐபிஎல் தொடர்களின்போது மும்பைக்கு ஆதரவாகவே பேசுவார், இந்தப் புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் வர்ணையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். ஏதோ விளம்பரத்துக்காக சஞ்சய் இப்படி செய்கிறார் என நினைத்திருந்த நிலையில், ரசிகர் ஒருவருடன் பேசிய தனிப்பட்ட சாட்டில் ஜடேஜாவை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் அவர் எத்தகைய மனநிலை கொண்டவர் என இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- ஆர்.ஜி.ஜெகதீஷ்