குழந்தைப்பேறுகால ஓய்வுக்கு பின் டென்னிஸ் களத்திற்கு திரும்பிய முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று வியக்க வைத்துள்ளார் சானியா மிர்சா. இதன் மூலம், முன்னணி வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆகியோரின் வரிசையில் சானியாவும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய மகளிர் டென்னிஸ் விளையாட்டில் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் சானியா மிர்சா. 2003 ஆம் ஆண்டு சீனியர் டென்னிஸ் போட்டிகளில் அறிமுகமான சானியாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. துடிப்பான வீராங்கனையான அவர், தனித்துவமான ஆட்டத்தால் தன்னை மெருகேற்றி, இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.
பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த ஷோயப் மாலிக்கை 2010ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டார் சானியா. வாழ்க்கைத் துணைவர் பாகிஸ்தான் நாட்டவர் என்ற போதிலும் தொடர்ந்து இந்தியாவிற்கே விளையாடுவேன் என்று கூறிய சானியா, அதன்படியே நடந்தும் கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் டென்னிஸ் மீதான ஈடுபாட்டை குறைத்துக் கொள்ளாத சானியா, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபனுக்கு பின் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார். இத்தகைய சூழலில், 2018 ஆம் ஆண்டு சானியா -மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய்மைக்கு பின் களத்திற்கு வரமாட்டார் என பலரும் கருதி வந்த நிலையில், விரைவில் தான் டென்னிஸ் களத்திற்கு திரும்புவேன் என்று கடந்த ஆண்டு அறிவித்தார் சானியா.
அதன்படியே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் உக்ரைன் வீராங்கனை நாடியாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் போட்டியில் களம் கண்டார் சானியா. தொடரின் அனைத்து போட்டிகளிலும் முழு ஆற்றலை வெளிப்படுத்தி வந்த இந்த இணை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீன வீராங்கனைகள் பெங் ஷூவாய், ஸாங் ஷூவாய் இணையை எதிர்த்து சானியா - நாடியா இணை களம் கண்டது. உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சானியா -நாடியா இணை அமர்க்களப்படுத்தியது. சர்வதேச டென்னிஸ் தொடர்களில் சானியா கைப்பற்றும் 42 ஆவது பட்டம் இதுவாகும்.
தாய்மை அடைந்தாலும், மன வலிமையும், ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரின் வரிசையில், தற்போது டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும் இணைந்துள்ளார். பேறுகால ஓய்விற்குப் பின் களம் திரும்பிய முதல் தொடரிலேயே கோப்பையை வென்றுள்ள சானியா மிர்சாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன