போலந்து தடகள போட்டியில் சமீஹா பர்வீன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

போலந்து தடகள போட்டியில் சமீஹா பர்வீன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
போலந்து தடகள போட்டியில் சமீஹா பர்வீன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
Published on
போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டியில் சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தடகள வீராங்கனை, சமீஹா பர்வீன். செவித்திறன் குறைப்பாடு உடைய இவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களையும், பெருமைமிகு பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், 'செவித்திறன் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டது. இதில், இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால் என்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தனது மனுவில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் தான் 11 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் போன்ற 13 பதக்கங்களை வென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சமீஹா பர்வின் தரப்பில் ‘தகுதி சுற்றில் தகுதி பெற்ற 5 வீரர்களில் தான் மட்டுமே பெண் என்பதால் போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைப்பெற உள்ள செவித்திறன் குறைபாடுயோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
தகுதி பட்டியலில் அவர் முன்னிலை வகிக்கவில்லை என்பதால் அவரது பெயர் இடம் பெறவில்லை என விளையாட்டு மேம்பாடு ஆணையம் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவர் எத்தனாவது இடம் பிடித்திருந்தாலும் பெண்கள் வரிசையில் அவர் தான் முதலில் உள்ளார் என்றும், அதனால் அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றார். 
'தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2018 ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்றுள்ள அவருக்கு ஏன் அனுமதி மறுக்கபட்டுள்ளது?' என கேள்வி எழுப்பிய நீதிபதி, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கப்பதங்களை பெற்ற சமீஹா பர்வீன் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை புறக்கணிப்பதெல்லாம் இந்த நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என வேதனை தெரிவித்தார்.
மேலும், போலந்தில் நடைபெறும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச போட்டியில் சமீஹாவை பங்கேற்க வைத்தால் கண்டிப்பாக தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபித்த நீதிபதி, போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைப்பாடு உடையோருக்கான சர்வதேச அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க  அழைத்து செல்ல உத்தரவிட்டு, நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொடர்பான நகலை சமீஹா பர்வீன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பாக இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com