கொச்சியில் நடைபெற்று வரும் மினி ஏலத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சாம் கரண் ரூ. 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக் கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் சாம் கரண் முதலிடம் பிடித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் 2023-ம் ஆண்டுக்கான மினி ஏலம் துவங்கியுள்ளது. இதில் செட் 1 வீரர்கள் ஏலம் விடப்பட்டு, செட் 2 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சாம் கரண் ஏலத்தில் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஏலம் துவங்குவதற்கு முன்பே சாம் கரண் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
ஏனெனில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ஆல் ரவுண்டர் சாம் கரண். இதனால், அவருக்கான டிமாண்ட் அதிகரித்தநிலையில், ஏலத்தில் விடப்பட்டதும் , 24 வயதான சாம் கரணை எடுக்க மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகள் மோதின. சென்னை அணி 15.25 கோடி ரூபாய் வரை அவரை எடுக்க ஏலம் கேட்டது.
ஆனால், லக்னோ, பஞ்சாப், மும்பை அணிகள் விடாது போட்டிப்போட்ட நிலையில், கடைசியாக பஞ்சாப் அணி 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரணை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் 15 சீசன்களில், அதிக விலைக்கு ஏலம் போனவராக சாம் கரண் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் தான். இவருக்கும் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க மோதின. கடைசியாக மும்பை அணி 17.5 கோடி ரூபாய்க்கு கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுத்துள்ளது. இதுவரை நடைபெற்ற ஏலத்தில் இவர்தான் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இதேபோல் இங்கிலாந்து வீரரும், அந்த அணியின் டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருந்தநிலையில், சென்னை அணி அவரை 16.25 கோடி ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து எடுத்துள்ளது.
இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 16 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி எடுத்துள்ளது. அதேபோல் 13.25 கோடி ரூபாய்க்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை வாங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சொல்லப்போனால், இதுவரை நடந்த ஐபிஎல் ஏலங்களில் அதிக விலைக்கொடுத்து 3 வீரர்கள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை.